ஆம்பூர் பைபாஸ் சாலையில் மதுபோதை டிரைவரால் தறிகெட்டு ஓடிய கார்
ஆம்பூர் பைபாஸ் சாலையில் நேற்று மாலை பைக் விற்பனை கடைக்குள் கார் புகுந்ததில் அப்பகுதியில் இருந்த ஒரு ஆட்டோ மற்றும் இரண்டு பைக்குகள் சேதமடைந்தன.
ஆம்பூர் பைபாஸ் சாலையில் டாஸ்மாக் கடை அருகே ரபிக் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் மற்றும் பைக் விற்பனை கடை உள்ளது. இந்த பகுதியில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் திடீரென ஒரு சிகப்பு நிற கார் ஒன்று அதிவேகமாக வந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி அப்பகுதியில் நின்றிருந்த ஆட்டோ, 2 பைக்குகள் மீது மோதியது. பின்னர் ரபிக் கடையின் முன் பக்கத்தில் இருந்த கூரை கம்பம் மீது பலமாக மோதி நின்றது. உடன் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து காருக்குள் இருந்த நபரை பத்திரமாக மீட்டனர்.அப்போது அந்த நபர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காரில் இருந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.