இந்தூர் மக்களவை தொகுதியில் ‘நோட்டா’வுக்கு ஆதரவும் எதிர்ப்பும்
இந்தூர் மக்களவை தொகுதியில் ‘நோட்டா’வுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளதால் பாஜக – காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் வர்த்தக தலைநகரான இந்தூர் தொகுதியில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதி கடந்த 35 ஆண்டுகளாக பாஜக வசம் உள்ளது. மக்களவையின் சபாநாயகராக இருந்த பாஜகவின் சுமித்ரா மகாஜன் இங்கே 8 முறை தொடர்ந்து வெற்றிபெற்றார்.
கடந்த 2019 ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், பாஜகவின் ஷங்கர் லால்வானி 5.48 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசின் பங்கஜ் சங்வியைத் தோற்கடித்தார். இந்த முறையும் பாஜக சார்பில் லால்வானி போட்டியிடுகிறார். திடீர் திருப்பமாக, வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான ஏப்ரல் 29ம் தேதி, காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காந்தி பாம் போட்டியில் இருந்து விலகி, பாஜகவில் சேர்ந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இவரது முடிவு காங்கிரசுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.