சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அதிரடி
மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி வழக்கில் நடிகர் சாகில் கான் கைது: சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அதிரடி
மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகர் சாகில் கானை சத்தீஸ்கரில் வைத்து மும்பை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்துள்ளனர். மகாதேவ் என்ற சூதாட்ட செயலி மூலம் பொதுமக்களை ஏமாற்றி ரூ.15,000 கோடி மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும், அமலாக்கத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 31 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில் நடிகர் சாகில் கானும் ஒருவர். ஸ்டைல், எக்ஸ்கியூஸ் மி உள்ளிட்ட படங்களில் நடித்தவரும் யூடியூபருமான சாகில் கான், மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் சிக்கினார். இந்த செயலியை விளம்பரப்படுத்தியதன் மூலம் பெரும் லாபம் ஈட்டியதாக, சாகில் கான் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சாகில் கானுக்கு கடந்தாண்டு டிசம்பரில் முதன்முதலில் சம்மன் அனுப்பப்பட்டது. எனினும் அவர் முன்ஜாமீன் கோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து, போலீசில் ஆஜராவதில் இருந்து தப்பித்து வந்தார். அண்மையில் இவரது முன்ஜாமீன் மனுவை அமர்வு நீதிமன்றம் நிராகரித்ததால் வேறு வழியின்றி போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் 3 மணி நேரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பின்னர், இவர் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கூறி அவரது மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. அதன் பிறகு, சாகில் கான் தலைமறைவானார்.