ஓட்டுநர் தொழிற்சங்கம் கண்டனம்
அரசின் கஜானாவை நிரப்பும் மனித இயந்திரங்களா? –
சென்னையில் போக்குவரத்து காவலர் ஒருவர் தனது சட்டையில் தனது பெயர் வில்லை கூட இல்லாமல், எந்தவித போக்குவரத்து விதி மீறல்களையும் மீறாமல் முறையாக பள்ளிக்கு நோட்டு, புத்தகங்களை எடுத்து சென்ற டாடா ஏஸ் (சிறு ரக) சரக்கு வாகன ஓட்டுனரிடம் லஞ்சம் கேட்டு அதை கொடுக்க மறுத்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். அதனை அந்த ஓட்டுனர் துணிச்சலாக எதிர்கொண்டு இன்றைக்கு தலைப்புச் செய்தியாக மாற்றி உள்ளார். (வீடியோ: https://youtu.be/hChzGsOU0xw ) அந்த ஓட்டுனருக்கு உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் அரணாக இருக்கும்
அதே வேளையில் இன்றைக்கு தமிழகம் முழுவதும் சிறுரக சரக்கு வாகன ஓட்டுநர்கள் வாகனங்களை சாலையில் இயக்கினாலே ஒன்று காவல்துறைக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 500 அபராதம் செலுத்த வேண்டும் என்ற எழுதப்படாத விதியை காவல்துறையினர் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்
மேலும் ரெட் டாக்ஸி என்ற கால் டாக்ஸி நிறுவனம் போக்குவரத்து விதிகளை மீறி தற்போது சென்னையில் 100 க்கும் மேற்பட்ட தங்கள் நிறுவனத்தின் கார்களில் சிவப்பு நிற வண்ணம் பூசியும் கேரியல்களை பொருத்தியும் பாரங்களை ஏற்றியும் செல்கிறது. இந்த நிறுவனத்தின் மீது சென்னை பெருநகர காவல் துறை இதுவரை ஏதேனும் ஒரு வழக்கையாவது பதிவு செய்திருக்குமா?
அதேபோன்று போர்ட்டர் என்ற நிறுவனம் வாகனத்தின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை மிரட்டி எந்தவித அனுமதியும் இன்றி வாகனங்களில் பிரம்மாண்ட விளம்பரங்களை செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் மீதும் போக்குவரத்து காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. மாறாக ஓட்டுனர்கள் மீதுதான் வழக்கு பதிவு செய்யப்படும்
கார்ப்பரேட் நிறுவனங்கள் என்றால் கடிவாளங்கள் இல்லை. சாதாரண ஓட்டுனர்கள் என்றால் அரசின் கஜானாவை நிரப்பும் மனித இயந்திரங்களாக காவல்துறை நினைப்பதை உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது
நேற்று நடைபெற்ற விஷயத்தில் சென்னை பெருநகர காவல் துறை ஆணையாளர் மற்றும் தமிழக காவல்துறை தலைவர் ஆகியோர் தலையிட்டு சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை வேண்டும். இல்லை என்றால் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் சார்பாக மாபெரும் போராட்டம் அறிவிக்கப்படும்
இனி தமிழகம் முழுவதும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம்.
- அ. ஜாஹிர் ஹுசைன், பொதுச் செயலாளர், உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம்