ஒரே வாரத்தில் பலி 5 ஆனது
கேரளாவில் வெயிலுக்கு மேலும் 2 பேர் மரணம்: ஒரே வாரத்தில் பலி 5 ஆனது
கேரளாவில் வெயில் கொடுமைக்கு நேற்று 2 தொழிலாளர்கள் இறந்தனர். இதையடுத்து ஒரே வாரத்தில் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது. கேரளாவில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல பகுதிகளில் 40 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கடும் வெப்பம் காரணமாக வரும் 6ம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தொழிலாளர்கள் திறந்த வெளியில் பணிபுரிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வெயில் கொடுமை காரணமாக கடந்த 2 தினங்களுக்கு முன் கேரளாவில் ஒரு வாலிபர் உள்பட 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்தநிலையில் நேற்று மேலும் 2 தொழிலாளர்கள் பலியானார்கள். மலப்புரம் அருகே உள்ள கூட்டிலங்காடி பகுதியில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த முகம்மது அனிபா (62) என்பவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். அதேபோல் கோழிக்கோடு சக்கும்கடவு பகுதியில் ஒரு வீட்டில் பெயிண்டிங் செய்து கொண்டிருந்த விஜேஷ் (41) என்ற தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதையடுத்து கடந்த ஒரு வாரத்தில் வெயில் கொடுமைக்கு கேரளாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்து உள்ளது.
இதற்கிடையே இன்றும் கேரளாவில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆலப்புழா, பாலக்காடு, திருச்சூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.