3 பேர் மீது பாய்ந்த வழக்கு..
பேரூராட்சி அலுவலகத்தில் சிக்கிய பணம்; 3 பேர் மீது பாய்ந்த வழக்கு..
சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பேரூராட்சி கணக்குகளை தணிக்கை செய்யும் பணியில் தணிக்கைக் குழு உதவி இயக்குநர் பூங்குழலி தலைமையில் தணிக்கை குழு ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்கள் தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பேரூராட்சி ஊழல் முறைகேடு கணக்குகள் குறித்து எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்காத வகையில் கணக்குகளை சரி செய்வதற்காக பெரிய அளவில் லஞ்சம் வழங்க உள்ளதாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தேவநாதனுக்கு புதன்கிழமை தகவல் வந்துள்ளது.
அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று மாலை திடீரென பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் இருந்துள்ளது. இதனைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன், கணக்கு தணிக்கை குழுவின் உதவி இயக்குநர் பூங்குழலி, தணிக்கை குழுவின் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.