கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு
குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை!: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்.29ம் தேதிக்கு ஒத்திவைப்பு
உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் யாரும் ஆஜராகாததால், விசாரணை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்ட சாட்சியங்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் குற்றம்சாட்டப்பட்ட கோடநாடு பங்களாவில், சோதனை நிபுணர் குழு கொண்ட ஒரு குழு அமைத்து கொலை, கொள்ளை நடைபெற்ற இடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
கடந்த முறை வழக்கு விசாரணையின்போது ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இன்று இந்த வழக்கு, உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சயான், மனோஜ், ஜம்சீர் அலி, தீபு, பிஜின், ஜித்தின் ஜாய், சதீசன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஒருவரும் ஆஜராகவில்லை. அரசு தரப்பில் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் ஆஜராகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக 2 மனுக்கள் தற்போது நிலுவையில் உள்ளது. அரசு தரப்பில் கோடநாடு பங்களாவில் ஆய்வு செய்ததும், குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் நீதிபதி தலைமையிலான குழு சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற மனுவும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனை விசாரித்த நீதிபதி எதிர்வரும் 29ம் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.