பந்து நாற்காலி
அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் பலரும் சந்திக்கும் பிரச்னை என்றால் அது நாள்முழுவதும் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிவதால் ஏற்படும் முதுகுவலிதான். அமரும் இருக்கை உடல் அமைப்புக்கு ஏற்புடையதாக இல்லாததும் இதற்கு ஒரு காரணம். எனவே, நாற்காலிக்கு மாற்றாக ஸ்டெபிலிட்டி பால் அல்லது சுவிஸ் பால் எனப்படும் பந்து நாற்காலியை பலரும் தற்போது பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இந்த பந்து நாற்காலி பெரும்பாலும் உடற்பயிற்சிக் கூடங்களில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதனை பயன்படுத்தி பல்வேறு உடற்பயிற்சிகள் செய்வதும் வழக்கமாக இருந்துவருகிறது. இந்நிலையில், இந்த உடற்பயிற்சி பந்தில் அமர்ந்திருக்கும்போது முதுகுவலியை கட்டுக்குள் வைப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் நிலையில் வேலைப்பளுவுக்கு மத்தியில் சிறு சிறு உடற்பயிற்சி செய்வதற்கும் நேரமாவது ஒதுக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நாம் செய்வதில்லை.
அதற்கான நேரமும் நமக்கு கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக இந்த இருக்கையில் அமர்ந்தபடியே வேலை செய்தால் அது உடல் தசைகளுக்குப் பயிற்சி கொடுத்தது போலவும், முதுகெலும்புக்கு வலுவை ஏற்படுத்திக் கொடுக்கவும் உதவுகிறது. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்த பந்து நாற்காலி சிறந்த தேர்வாக அமையும். ஏனென்றால் இதில் ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தால் சுமார் 160 கலோரிகளி வரை எரிக்க உதவுகிறது. மேலும், பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு போன்ற பிரச்னைகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம்.