துபாயில் ஒரு ஆண்டில் பெய்யும் மழை ஒரே நாளில்
பாலைவன பூமியான துபாயில் ஒரு ஆண்டில் பெய்யும் மழை ஒரே நாளில் கொட்டியது ஏன்?: செயற்கையால் வந்த வினை
துபாயில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு செயற்கை மழைதான் காரணமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாலைவன பூமியான துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் கடும் வெப்பநிலையை தாக்குபிடிக்க அவ்வப்போது செயற்கை மழை வரவழைக்கப்படும். வானில் விமானங்களில் இருந்து சில ரசாயனங்கள் தூவப்பட்டு செயற்கை மழை வரவழைக்கப்படும். இது மேக விதைப்பு எனப்படும்.
குடிநீர் உற்பத்திக்கும், நிலத்தடி நீரை பெருக்கவும் அவ்வப்போது இவ்வாறு செயற்கை மழை வரவழைப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது அதிகப்படியான மேக விதைப்பு செய்யப்பட்டதால்தான் துபாயில் வரலாறு காணாத மழை கொட்டியிருப்பதாக டபிள்யுஏஎம் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலைய வானிலை தரவுகளின்படி, கடந்த 15ம் தேதி மாலையில் மழை தொடங்கியது. 20 மிமீ மழை பெய்திருந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மழை தீவிரமடைந்து நாள் முழுவதும் ஆலங்கட்டி மழை கொட்டியது. இதனால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 142 மிமீ மழை பதிவாகி உள்ளது. துபாயின் ஓராண்டு சராசரி மழை அளவு வெறும் 94.7 மிமீ மட்டுமே. இப்படி ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததால், விமானம் நிலையம் முழுவதையும் வெள்ளம் சூழ்ந்தது.
மழை அரிதாக பெய்வதால் துபாய் சாலைகளில் பெரிய அளவில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படுவதில்லை. இதனால் அனைத்து முக்கிய சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. துபாய் மட்டுமின்றி பஹ்ரைன், ஓமன், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவிலும் மழை பெய்தது.
இந்த மழைக்கு முன்பாக கடந்த 14ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் 6 முதல் 7 மேக விதைப்பு விமானங்கள் பறந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவ்வாறு அதிகப்படியான மேக விதைப்பால்தான் ராட்சத மழை கொட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதற்கு அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் தரப்படவில்லை. இந்த வரலாறு காணாத மழையில் ஓமனில் பள்ளி வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 10 மாணவர்கள் உட்பட 11 பேர் பலியாகி உள்ளனர். ஓமனில் மழைக்கான பலி 19 ஆக அதிகரித்ததாக அந்நாட்டு அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
11 விமானம் ரத்து
கனமழை காரணமாக, கேரளாவிலிருந்து நேற்று சார்ஜா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கொச்சியிலிருந்து துபாய், சார்ஜா, தோகாவுக்கு செல்ல வேண்டிய 5 விமானங்களும், கோழிக்கோட்டிலிருந்து சார்ஜா, துபாய்க்கு செல்ல வேண்டிய 2 விமானங்களும், திருவனந்தபுரத்திலிருந்து துபாய் மற்றும் சார்ஜாவுக்கு செல்ல வேண்டிய 4 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.