ராக்கெட்டில் உந்து விசைக்காக எடை குறைந்த ‘நாசில்’
ராக்கெட்டில் உந்து விசைக்காக எடை குறைந்த ‘நாசில்’ கருவியை உருவாக்கி இஸ்ரோ சாதனை
எரிபொருளில் வேதி மாற்றத்தை உருவாக்கி விண்ணில் செல்வதற்கு தேவையான உந்துவிசையை வழங்க, ராக்கெட்டில் உள்ள ‘நாசில்’ எனும் கருவி பயன்படுகிறது. தற்போது பிஎஸ்எல்வி ரக ராக்கெட்டின் 4-ம் நிலையில் (பிஎஸ்-4) நாசில்களுடன் கூடிய 2 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு மாற்றாக, மிகவும் இலகுவான எடை கொண்ட நாசில், கார்பன் மூலக்கூறு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ராக்கெட்டின் உந்துவிசை மற்றும் எரிசக்தி ஆற்றல் திறன் உள்ளிட்ட அம்சங்கள் மேம்படுவதுடன், நாசில் கருவியின் எடையும் 67 சதவீதம் வரை குறையும். இதனால், 15 கிலோ கொண்ட ஆய்வு கருவிகளை பிஎஸ்-4 நிலையின் மூலம் விண்ணுக்கு செலுத்த முடியும்.
திருநெல்வேலி மகேந்திரகிரியில் உள்ள ஆய்வு மையத்தில் இதற்கான பரிசோதனைகள் கடந்த மார்ச் 19, ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. அப்போது அந்த கருவி திட்டமிட்டபடி சிறப்பாக செயல்பட்டு செயல் திறனை உறுதி செய்தது. இத்தகவலை இஸ்ரோ தெரிவித்துள்ளது