நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 7

நல்ல மருந்து…!

நல்ல மருந்து, நம்ம நாட்டு மருந்து என்று சொல்வதை விட நல்ல உணவு, நம்ம நாட்டு உணவு என்று சொல்வதே சிறப்பானதாக இருக்கும்.
காரணம் நமது உணவே நமக்கு குறைவற்ற செல்வமாக திகழ்ந்தது என்றால் மிகையாகாது.

அதாவது நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்ததை தான் நான் இங்கு குறிப்பிடுகிறேன்.

நோயில்லா பெருவாழ்வு வாழ்வதற்காக மருந்தாக இருந்தது நமது உணவியல் கலாச்சாரம்…!

கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நமது பெரியவர்கள் உண்ணும் போது பேசக்கூடாது, உணவை கவனித்து அதை தெய்வமாகப் போற்றி உண்ண வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
என்பதைவிட மிரட்டினார்கள் என்று சொல்லுவதுதான் சரியாக இருக்கும்.

காரணம் நாம் எதை உண்கிறோம் அது எப்படி நமக்கு மருந்தாக மாறி நமது உடலையும் ஆன்மாவையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது என்பதை நாம் உணர வேண்டும் என்பதற்காகத்தான்.

இன்று எதை உண்கிறோம், எப்படி உண்கிறோம் என்பதே தெரியாமல், தொலைக்காட்சிப் பெட்டிகளில் நமது உணவின் ருசியை தொலைத்துவிட்டு உணவை தின்று வருகிறோம்.

போக்குவரத்துகள் துரிதமாக இல்லாத 60ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம், அவரவர்கள் பிறந்து வளர்ந்த பகுதியில் என்ன சிறுதானியங்கள் கிடைத்ததோ அதையே உணவாக உட்கொண்டு வந்தார்கள்.

ஏட்டுக்கல்வியும், அறிவியல் கலாச்சாரமும் இரண்டும் சேர்ந்து நவீன நவநாகரீகத்தை தோற்றுவித்தது.

அதன் காரணமாகவே நமது பாரம்பரிய தாய் உணவியல் கலாச்சார மார்க்கத்தை மாற்றிக் கொண்டோம்.

அன்னிய உணவியல் கலாச்சார மார்க்கத்தை தாவி…. தழுவி உணவை விழுங்கத் தொடங்கினோம்.
அதன் விளைவுதான் இன்று சாதாரண வைரஸ் கிருமிகளைக் கூட, நமது உடல் எதிர்க்க முடியாமல், நோய் எதிர்ப்பு திறன் இன்றி திணறிக் கொண்டிருக்கிறது.

பொதுவாக நாம் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் பகுதியில், அதாவது சுமார் 40 கிலோ மீட்டர் சுற்றளவில் கிடைக்கக்கூடிய தண்ணீர் முதல் அனைத்து தாவர உணவுகளையும் நமது உடல் ஏற்றுக் கொண்டு, எந்தவிதமான நோய் நொடிகள் இல்லாமல் நமது வாழ்க்கை ஆரோக்கியமாகவும், ஆனந்தம் நிறைந்ததாக இருந்தது.

தற்போது அவை எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது, அதன் காரணம் என்னவென்றால்….?

உதாரணமாக திருச்சியில் வசிப்பவர் அருகே உள்ள தஞ்சாவூர் அல்லது மதுரை அல்லது கரூருக்கோ சென்று வந்தவுடன் அவருக்கு உடனே ஜலதோஷம் பிடிக்கும்.

காரணம் திருச்சியில் வசிப்பவர்களுக்கு கரூர் தண்ணீர் ஒவ்வாமையை அதாவது அலர்ஜியை ஏற்படுத்தி விடும்.

இதனால் அவர்கள் மூன்று நாட்களுக்கு அச்சு… அச்சு… என்று மூக்கை சிந்தி கொண்டிருப்பார்கள்.

இதுபோன்ற ஒவ்வாமை எனும் அலர்ஜி அனுபவத்தை 60 வயது கடந்தவர்களை கேட்டால் மட்டும் தான்….!

அந்த ஜலதோஷம் எனும் சளி பிடித்த சங்கடமான அவதி நிறைந்த அனுபவ நாட்களை அவர்களால் விபரமாக விரிவாக சொல்ல முடியும்.

தற்போது இந்த கவலை எல்லாம் யாருக்கும் கிடையாது.
காரணம் சுத்திகரிக்கப்பட்ட R.O., தண்ணீரின் ஆளுமை…!

மேலும் நமது உணவியல் கலாச்சாரத்தை தொடர்ந்து பார்ப்போம்.
எதையும் வரும் முன் காப்போம்…

நல்ல மருந்து, நம்ம நாட்டு மருந்து,

தொகுப்பு:- சங்கரமூர்த்தி… 7373141119

Leave a Reply

Your email address will not be published.