எட்டாம் பாவகம்
பன்னிரு பாவகங்களில் எட்டாமிடம் அட்டமத்தானம், மாங்கல்யத்தானம், ஆயுள்தானம் என்று அழைக்கப்பெறும்.
இதன் பலன்கள்
- வாளாயுத காயம்
- யுத்தம்
- மலை மீதிருந்து வீழ்தல்
- மீளா வியாதி
- காரியவிக்கினம்
- நீங்காத விசனம்
- நீங்காத பல துன்பம்
- மானக்குறைவு
- செலவினால் நட்டம்
- ஆயுள்
- நீங்காத பகை
முதலியவைகளை அறியலாம்.
பொதுவாக இலக்கினத்திற்கு எட்டாமிடம் சுத்தமாய் இருத்தல் மிகுந்த நன்மையைத் தரும். எட்டில் கிரகம் நிற்கக் கூடாது.
சுபர் பார்வை, நன்மையைத் தரும். சனி, சுக்கிரன், புதன் இடத்திற்கு ஏற்பப் பலனைத் தருவர். மற்றவர்கள் தீமையைத் தருவர். செவ்வாய், குரு, புதன், சுக்கிரன், சனி இவர்களுக்கு அட்டமாதிபத்ய தோடம் உண்டு. சூரியன், சந்திரன் இவர்களுக்கு அத்தோடம் கிடையாது. ஆறு, எட்டு, பன்னிரண்டு இவ்வீடுகளில் நிற்கும் கிரகங்கள் ஆட்சி, உச்சம் எனில் பலன்கள் மாறுபடும்.
அட்டமன் விதி பற்றி புலிப்பாணி ஜோதிடம் தரும் செய்தி
புலிப்பாணி ஜோதிடம் எனும் நுால் இலக்கினத்திற்கு அட்டமாதிபதி யாராக இருந்தாலும் பலம் உள்ளவர். அவரால் சிறைப்படுதலும், மரணம் வாய்த்தலும், மலை மேல் ஏறித் தவறி விழுந்து இறத்தலும் பரதேசம் செல்வதும், மற்றும் கொடிய பகையும், கொடுவாள் போன்ற ஆயுதங்களால் காயமும், குடும்பத்திற்கும், பூமிக்கும், தொழிலிற்கும் துன்பம் விளைத்தலும், விஷபயமும், அம்மை, பேதி போன்ற பற்பல விதமான துன்பங்களைத் தரும் வினையும் நேரும் என்று புலிப்பாணி சித்தர் தமது நுாலில் குறிப்பிட்டுள்ளார்.
“பாரப்பா அட்டமனு மெவரானாலும்
பலமுள்ளோர் அப்பலனை பணிந்து கேளு
சீரப்பா சிறைமரணம் கிரிமேலேறி
சிவசிவா வீழ்ந்திடுவன் தேசம் செல்வன்
கூரப்பா கொடும்பகையும் கொடுவாள்காயம் குடிமண்ணுஞ் சீவனமும் மோசக்கேடு
வீரப்பா விஷபயமும் அம்மைபேதி
விளையுமடா பலதுன்பம் வினையைக்கேளு”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது. (வளர்மதி, புலிப்பாணி சோதிடம், பா. 83, ப.53)
Astro Selvaraj Trichy
Cell : 9842457912
வே. இராஜவர்மன் டில்லி தலைமை ஆசிரியர்