பும்ராவை ஹர்திக் கச்சிதமாகப் பயன்படுத்தியது எப்படி
சொந்த மைதானம், 360 டிகிரி வீரர் சூர்யகுமார் அணிக்குத் திரும்பியது, பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு என பல சாதகமான அம்சங்களை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட மும்பை அணி ஐபிஎல் தொடரில் 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. 197 ரன்களை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 27 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை ஒருவெற்றி மட்டும்தான் வெற்றுள்ளது, அதன்பின் தொடர்ந்து 5 தோல்விகளால் துவண்டுபோயுள்ளது. 2 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் ஆர்சிபி பின்தங்கி இருக்கிறது, நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.124 ஆகக் குறைந்துள்ளது.
மும்பை வான்கடே மைதானம் மிகச்சிறியது, அதிலும் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி என்று வர்ணிக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது, ஆர்சிபி அணி சேர்த்த 196 ரன்கள் என்பது பேட்டிங் பலமுள்ள மும்பை அணிக்கு எதிராக நிச்சயமாகப் போதாது. 250 ரன்களுக்கு மேல் சேர்த்திருந்தால்தான், வான்கடே மைதானத்தில் சவாலான இலக்காக இருந்திருக்கும். 197 ரன்கள் சேஸிங் என்பது வான்கடே மைதானத்தில் அதிலும்மும்பை அணி சேஸிங் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.