தருமபுரி: திமுக-பாமக-அதிமுக எதிர்பார்ப்பு என்ன
தருமபுரி: திமுக-பாமக-அதிமுக போட்டியிடும் தொகுதியில் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? – கள நிலவரம்
தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான தருமபுரி தொகுதி, கடும் தேர்தல் போட்டியின் காரணமாக மீண்டும் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் அங்கு களநிலவரம் எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள பிபிசி தமிழ் நேரடியாகச் சென்றது.
தமிழ்நாட்டின் வடமேற்கு மாவட்டங்களில் ஒன்றான தருமபுரி, மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய தொகுதிகளில் ஒன்று. வாழப்பாடி ராமமூர்த்தி, தம்பிதுரை, கே.வி. தங்கபாலு, அன்புமணி ராமதாஸ் போன்ற முக்கியத் தலைவர்கள் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி என்பதால், எப்போதுமே கவனிக்கப்படும் தொகுதியாகவும் இருந்துவந்திருக்கிறது.
இந்தத் தொகுதியில் 1998 முதல் 2019 வரை நடந்த 6 தேர்தல்களில் நான்கு தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சியே வெற்றிபெற்றிருக்கிறது. இரண்டு முறை தி.மு.க. வெற்றிபெற்றிருக்கிறது. 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் செ.செந்தில்குமார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.கவின் அன்புமணி ராமதாஸைவிட சுமார் 63,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
இந்தத் தொகுதியில் தி.மு.க. நேரடியாகப் போட்டியிட்டாலும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான செ.செந்தில்குமாருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை. மாறாக தி.மு.க-வின் மாவட்டத் துணைச் செயலாளரான ஆ. மணிக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
அவரை எதிர்த்து பா.ஜ.க – பா.ம.க கூட்டணியின் சார்பில் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். அ.தி.மு.க-வின் சார்பில் அக்கட்சியின் தருமபுரி நகரச் செயலாளர் ரவியின் மகன் அசோக் போட்டியிடுகிறார்.