118 வயது மிட்டாய் தாத்தா தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்

தஞ்சை கீழவாசல் ஆடக்காரத்தெருவில் வசித்து வருபவர் முகமது அபுசலி. 118 வயதான இவரை அப்பகுதியில் உள்ளவர்கள் மிட்டாய் தாத்தா என்று அழைக்கின்றனர். வீட்டையொட்டி மிட்டாய் கடை வைத்து நடத்தி வரும் இவர் இந்த வயதிலும் அவராகவே நடந்து செல்கிறார். அன்றாட பணிகளை யாருடைய உதவியுமின்றி தானே செய்து வருகிறார். தினமும் நாளிதழ்களை வாசித்து வருகிறார். இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்துள்ளார்.இந்நிலையில் நடைபெறவுள்ள 18வது மக்களவை தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளம்வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை அரசு தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டு மைதானத்தில் இருந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பிரசாரத்தை தொடங்கி வைத்த மிட்டாய் தாத்தா பொதுமக்களிடமும், ஆட்டோ ஓட்டுனர்களிடமும் இனிப்புகள் வழங்கினார். அப்போது மதிப்புமிக்க வாக்குகளை பணத்துக்காக விற்காமல் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். வாக்களிக்க தகுதிபெற்ற அனைவரும், குறிப்பாக 18 வயது நிறைவடைந்து முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் இந்த நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்தில் நமது உரிமையை நிலைநாட்டும் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதற்கான ஏற்பாடுகளை தனியார் தொண்டு நிறுவனத்தினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.