காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி
கச்சத்தீவு விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது அந்தர் பல்டி அடிப்பது ஏன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
2015 ஜன.27-ல் தகவல் அறியும் விண்ணப்பத்துக்கு தான் அளித்த பதிலை ஜெய்சங்கர் படித்துப் பார்க்க சிதம்பரம் அறிவுரை வழங்கி உள்ளார். கச்சத்தீவு தொடர்பான 1974 ஒப்பந்தம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெற்ற ஆர்டிஐ தகவலுக்கு பிறகு இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பாகி வருகிறது. இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
“1974 ஒப்பந்தப்படி இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமை உள்ளது. இந்திய மீனவர்கள் 6,184 பேரை இதுவரை இலங்கை அரசு கைது செய்துள்ளது,”எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி குறித்து காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில்,
” கச்சத்தீவு விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது அந்தர் பல்டி அடிப்பது ஏன்?.2015-ல் ஆர்.டி.ஐ.யில் கேட்கப்பட்ட கேள்விக்கு கச்சதீவு இலங்கைக்கு சொந்தம் என வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்தது. கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்று இந்தியா அங்கீகரித்ததை 2015-ல் நியாயம் என விளக்கியிருந்தார் ஜெய்சங்கர். கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது சரியே என்று 2015-ல் கூறிய ஜெய்சங்கர் இப்போது அந்தர் பல்டி அடிப்பது ஏன்? வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் ஊதுகுழலாக மாறியுள்ளார்.
வெளியுறவுத்துறை செயலர் முதல் அமைச்சர் வரை ஜெய்சங்கரின் குட்டிக்கரண விளையாட்டு சாதனை வரலாற்றில் பதிவாகும்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதே போல், ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில்,
”கடந்த 50 ஆண்டுகளாக இந்திய மீனவர்கள் சிறை வைக்கப்பட்டு இருப்பது உண்மைதான். அதேபோன்று பல இலங்கை மீனவர்களையும் இந்தியா கைது செய்துள்ளது. ஒவ்வொரு அரசாங்கமும் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது மீனவர்களை விடுவித்துள்ளன. ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை அதிகாரியாக இருந்தபோதும், வெளியுறவுச் செயலராக இருந்தபோதும், வெளியுறவு அமைச்சராக இருந்தபோதும் இது நடந்துள்ளது. காங்கிரஸுக்கும் தி.மு.க.வுக்கும் எதிராகப் பேசுவதற்கு ஜெய்சங்கருக்கு என்ன காரணம்?. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், பாஜக ஆட்சியில் இருந்தபோதும், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தபோதும் மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படவில்லையா? 2014 முதல் மோடி ஆட்சியில் இருந்தபோது மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படவில்லையா?,”இவ்வாறு தெரிவித்துள்ளார்