வடசென்னை மக்களவை தொகுதி ஒரு பார்வை
பழைய மெட்ராஸ் என்று அழைக்கப்படும் வடசென்னை மக்களவை தொகுதி
தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில் வடசென்னை 2 ஆவது தொகுதியாகும். தொழிற்சாலைகளும், மீன்பிடித் தொழிலும் செழித்தோங்கும் வட சென்னை தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2008 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே நகர்), பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க நகர், இராயபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இந்த மக்களவைத் தொகுதியில் உள்ளன.
ஒட்டுமொத்த சென்னையும் தி.மு.க.,வின் கோட்டை என்று கூறப்படும் நிலையில், அதிலும் குறிப்பாக வடசென்னை தி.மு.க.,வின் கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது. இதுவரை இந்தத் தொகுதியில் 16 முறை தேர்தல் நடந்துள்ள நிலையில், அதில் 11 முறை தி.மு.க நேரடியாக போட்டியிட்டு வென்றுள்ளது. இதில் இரண்டு தேர்தல்கள் தி.மு.க தோன்றுவதற்கு முன் நடந்தவை, அப்படி பார்தோமேயானால் 14 தேர்தல்களில் 11 முறை தி.மு.க வென்று, தொகுதியில் அசைக்க முடியாத சக்தியாக உள்ளது. எம்.ஜி.ஆராலும் தி.மு.க.,வை வீழ்த்த முடியாத தொகுதியாக வடசென்னை இருந்துள்ளது. அ.தி.மு.க இந்த தொகுதியில் ஒரே ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. அதுவும் அ.தி.மு.க தமிழகம் முழுவதும் 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற 2014 தேர்தலில் தான்.
வடசென்னை தொகுதியில் 1957ல் தான் முதல் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து லோகியா சோசலிஸ்ட் கட்சி சார்பில் சுயேட்சையாக போட்டியிட்ட அந்தோனிப்பிள்ளை வெற்றி பெற்றார். அவர் தொழிற்சங்க தலைவராக இருந்தவர். அடுத்து 1962ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இதனைத்தொடர்ந்து வடசென்னை தொகுதி தி.மு.க.,வின் கோட்டையாக மாறியது. 1967 தேர்தலில் தி.மு.க வேட்பாளர் மனோகரன் வெற்றி பெற்றார். 1971, 1977, 1980, 1984 என தொடர்ச்சியாக 5 தேர்தல்களில் தி.மு.க வெற்றி பெற்றது.
1989 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தா.பாண்டியன் வெற்றி பெற்றார். 1991 தேர்தலிலும் மீண்டும் காங்கிரஸின் தா.பாண்டியன் வெற்றி பெற்றார்.
பின்னர் 1996 தேர்தலில் தொகுதி மீண்டும் தி.மு.க வசமானது. 1996, 1998, 1999, 2004, 2009 என தொடர்ச்சியாக 5 தேர்தல்களில் தி.மு.க வெற்றி பெற்றது. இதில் மூன்று முறை வெற்றி பெற்று குப்புசாமி எம்.பி.,யானார். 2009 தேர்தலில் தி.மு.க மூத்த தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.
2014 தேர்தலில் தான் முதன்முறையாக இந்தத் தொகுதியில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் ஜெயலலிதா அலை வீசியது, இதனால் தமிழகத்தில் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை அ.தி.மு.க வென்றது. அந்த சமயத்தில் வடசென்னை தொகுதியிலும் அ.தி.மு.க வென்றது.
பின்னர் 2019 தேர்தலில் தொகுதியை மீண்டும் தி.மு.க கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சரும், மூத்த தி.மு.க தலைவருமான ஆற்காடு வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி வீராசாமி களமிறங்கினார். அவரை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க வேட்பாளர் மோகன் ராஜ் களமிறங்கினார். கலாநிதி வீராசாமி கிட்டதட்ட 48% வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றார்.
கலாநிதி வீராசாமி 5,90,986 வாக்குகளையும், தே.மு.தி.க வேட்பாளர் 1,29,468 வாக்குகளையும் பெற்றனர். மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட மௌரியா 10.8% (1,03,167) சதவீத வாக்குகளைப் பெற்றார்.
திமுக சார்பாக கலாநிதியும், பாஜக சார்பில் பால் கனகராஜ், அதிமுக சார்பில் இராயபுரம் மனோ போட்டியிடுகிறார்கள்.