ஆபத்தாகும் சுகப்பிரசவம்… தப்பிக்கவும், தற்காக்கவும் என்ன வழி?
சுகப்பிரசவம்...
கருவில் இருக்கும் குழந்தையானது இயற்கையாக கர்ப்பப்பை வாய் வழியாக வெளியே வருவதையே சுகப்பிரசவம் என்கிறோம். கருப்பையின் வாய் 10 சென்டிமீட்டர் வரை திறந்தால்தான் குழந்தை வெளியே வர சாத்தியமாகும். இதில் தலை முதலில் வெளியே வந்து, கடைசியாக கால் வெளியே வருதல் அவசியம்.
எர்ப்ஸ் பெல்சி…
‘Erb’s Palsy’ என மருத்துவத்தில் அழைக்கப்படும் இந்தப் பிரச்னையில் கைகளுக்கு செல்லும் நரம்புகள் கழுத்துப் பகுதியில் பாதிக்கப்படும். இதில் பெரும்பாலும் ஒரு பக்க நரம்புகள்தான் பாதிக்கப்படும் என்பதால், ஒரு பக்கத்தில் தோள்பட்டை முதல் விரல்கள் வரை தசைகள் பாதிக்கப்படும்.
நரம்பு மண்டலம்…
முதுகு தண்டுவடத்திலிருந்து நரம்புகள் பிரிந்து உடல் முழுக்க சிறு நரம்புகளாக செல்லும். இதில் கழுத்துப் பகுதியில் நரம்புகள் பிரிந்து இரு கைகளுக்கும் சென்று விரல்களில் முடியும். தோள்பட்டை முதல் விரல்கள் வரையுள்ள தசைகளை இயங்கச் செய்வது இந்த நரம்புகளே.
பாதிக்கப்படும் தசைகள்…
மூளையிலிருந்தும், முதுகு தண்டுவடத்திலிருந்தும் சமிக்கைகளை தசைகளுக்கு கடத்தி அதன் வேலையை செய்ய வைப்பது நரம்புகளே. எனவே, நரம்பு பாதிக்கப்படுவதால் தசைகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து போகும். நரம்புகள் எந்தளவு பாதிக்கப்படுகிறதோ, அதற்கு ஏற்ப தசைகளின் குணமடையும் காலமானது நீளும்.
தோள்பட்டை முதல் விரல் வரை குறிப்பிட்ட தசைகளே பாதிக்கப்படுவதால், மற்ற தசைகளைக் கொண்டு ஓர் அளவுக்கு கையினை இயக்க முடியும். ஆனால், உள் திரும்பியவாறு இருக்கும். அதாவது, காவல் துறை அதிகாரி மறைமுகமாக முன் திரும்பி பின்னால் கையினை கீழே நீட்டி லஞ்சம் கேட்பது போல் இருக்கும், எர்ப்ஸ் பெல்சியால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு. அதனால் இதனை மருத்துவத்தில் ‘Police man Tip Syndrome’ என விளையாட்டாக அழைப்பர்.
குழந்தைகளுக்கு…
சுகப்பிரசவம் ஆவதற்கு நிறைய விதிகள் உள்ளன. முதலில் குழந்தையின் தலை கருப்பை வாய் நோக்கி திரும்பி இருக்க வேண்டும். ஏனெனில், கால் முதலில் வெளியே வருவது சுலபம். ஆனால் தலை பெரிய உறுப்பு என்பதால், தோள்பட்டை வரை வெளியே வந்தவுடன் தலை உள்ளே மாட்டிக் கொண்டு வெளிவர சிரமமாக இருக்கும்.இதனால் மருத்துவர்கள் ஒரு கட்டத்தில் தோள்பட்டையை பிடித்து இழுத்து குழந்தையின் தலையை வெளியே எடுப்பார்கள். இதில் இழுக்கும் போது 90 சதவிகிதம் நிச்சயம் கழுத்தில் நரம்புகள் சேதமடையும். இதுவே பச்சிளம் குழந்தைகளுக்கு எர்ப்ஸ் பெல்சி வருவதற்கு காரணம்.
பெரியவர்களுக்கு…
பிறக்கும் குழந்தைகளை தவிர, பிற வயதினருக்கு வருவது மிகவும் அரிது. ஏதேனும் விபத்தில் கழுத்துப் பகுதி பாதிக்கப்படும்போது நிகழலாம். எப்படி கண்டறிவது…?
குழந்தையின் தலை பிரசவ நேரம் வரை திரும்பவில்லை எனில் பெல்சி வரும் வாய்ப்பு அதிகம் என்பதால், குழந்தை பிறந்தவுடன் குழந்தைகள் நல மருத்துவர் அல்லது இயன்முறை மருத்துவர் குழந்தையினை முழுவதும் பரிசோதனை செய்து கண்டறிவர். அதேபோல மற்ற அனைத்து வகையான சுகப்பிரசவத்திற்கும் பரிசோதனை செய்வதும் அவசியம்.
இயன்முறை மருத்துவம்…
இவ்வகை நரம்பியல் பிரச்னையின் முதல்கட்ட தீர்வே இயன்முறை மருத்துவம்தான். இயன்முறை மருத்துவர் பரிசோதித்து பாதிக்கப்பட்ட கைக்கு பயிற்சிகளை வழங்குவர். மேலும் சில மாதங்கள் ஆனவுடன் ஸ்பிலிண்ட் (Splint) எனப்படும் பெல்ட் போன்ற ஒன்றை கையில் அணிவதற்கு அறிவுறுத்துவர். இதனால் பாதிக்கப்பட்ட தசைகளை இயல்பான நிலையில் வைத்திருக்க முடியும். ஒரு நாளைக்கு குறிப்பிட்ட மணிநேரம் இதனை அணிவது அவசியம்.
இவ்வாறு தொடர்ந்து சில மாதங்கள் செய்து வந்தால் எளிதில் நரம்புகள் குணமடைந்து தசைகளும் இயல்பாய் இயங்க ஆரம்பித்துவிடும். மிக அதிகமான அளவில் நரம்பு பாதிக்கப்பட்டிருந்தால் வெகு சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
எச்சரிக்கை…
*சில மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் ஆகவேண்டும் என வலுக்கட்டாயமாக இவ்வாறு தலை திரும்பாத குழந்தைகளை வெளியே எடுக்கின்றனர். எனவே இறுதிவரை தலை திரும்பவில்லை எனத் தெரிந்தால் அறுவை சிகிச்சையை தேர்ந்தெடுப்பதுதான் உத்தமம்.
*அதேபோல பச்சிளம் குழந்தை என நினைத்து உடற்பயிற்சிகள் செய்ய சில பெற்றோர்கள் தயங்கி இயன்முறை மருத்துவம் செய்யாமல் இருப்பர். எனவே, உரிய காலத்தில் கொடுக்கப்படும் சிகிச்சை உரிய காலத்தில் குணமடைய வழிவகுக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்வது அவசியம்.மொத்தத்தில் ஆபத்தை உணராமல் ‘சுகப்பிரசவம் ஒன்றே சிறந்தது’ என நினைக்காமல், அந்தந்த சூழலுக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுத்தால், இது போன்ற பல விளைவுகளை தடுக்கலாம்.