பினராயி விஜயனின் மகள் மீது அமலாக்கத்துறை

தாது மணல் நிறுவனத்திடம் ரூ.1.72 கோடி பெற்ற விவகாரம் பினராயி விஜயனின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

கொச்சியிலுள்ள ஒரு பிரபல தனியார் தாது மணல் நிறுவனத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு டைரியில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் நடத்திவரும் சாப்ட்வேர் நிறுவனத்திடமிருந்து சேவை பெற்றதற்காக ரூ.1.72 கோடி பணம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இது குறித்து வருமான வரித்துறை நடத்திய விசாரணையில் வீணா விஜயனின் நிறுவனம் எந்த சேவையும் வழங்கவில்லை என தெரியவந்தது. இது தொடர்பாக வருமானவரித்துறை வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தீவிர மோசடி விசாரணை அலுவலகமும் (எஸ்எப்ஐஓ) விசாரணையை தொடங்கியது. தாது மணல் நிறுவனம், வீணா விஜயனின் சாப்ட்வேர் நிறுவனம் மற்றும் கேரள தொழில் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகம் ஆகிய 3 நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமலாக்கத்துறையும் இந்த மோசடி குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது. தாது மணல் நிறுவனம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்துள்ளதாக தெரியவந்ததை தொடர்ந்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வீணா விஜயன், அவரது சாப்ட்வேர் நிறுவனம், தாது மணல் நிறுவனம் மற்றும் கேரள தொழில் வளர்ச்சி மேம்பாட்டு கழகம் ஆகிய 3 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.