அமைச்சர் துரைமுருகன் பேச்சு
திமுக என்பது கொள்கை கூடாரம் அதை யாராலும் அழிக்க முடியாது:
வேலூர்: வேலூர் மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, தகவல் தொழில்நுட்ப அணி, தொண்டரணி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் தலைமையில் நேற்று நடந்தது.
இதில் திமுக பொதுச்செயலாளர், அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
ஒரு இயக்கம் உயிரோட்டமாக இருக்க மகளிர் அதிகமாக இருக்க வேண்டும் என்று பெரியார் சொல்வார். 1929ல் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் சொத்தில் பெண்ணுக்கு சமபங்கு என்று நிறைவேற்றிய தீர்மானத்தை, கலைஞர் முதல்வராக இருந்தபோது சட்டமாக்கினார். உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கினார்.
இந்த இயக்கம் தமிழ்மொழி, தமிழர்களை காக்க உருவாக்கப்பட்ட இயக்கம். பெரியார் இல்லை என்றால் இன்று தமிழன் தலைநிமிர்ந்து இருக்க முடியாது. அவரது உணர்வு, அரசியல் தெளிவு நமக்கு இருக்க வேண்டும். அண்ணா மறைவுக்கு பிறகு கலைஞர் முதல்வரானார். அப்போது பெரியாரை சந்தித்தபோது, அவரிடம், கட்சியில் கடமை, கண்ணியத்தை விட கட்டுப்பாடு மட்டும்தான் தேவை என்றார். அதனால்தான் கட்சி வளர்ந்து இருக்கிறது.
திமுக என்பது கொள்கை கூடாரம். மோடி சொல்வது போல யாராலும் அழித்துவிட முடியாது. ஆகவே, கட்சி உணர்வுடன் பணியாற்றி நாடாளுமன்ற தேர்தலில் கதிர்ஆனந்த் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.