புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும் அன்பழகன்
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று (23-03-2024) செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கழகத்தின் சார்பில் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், புரட்சித்தமிழர் அவர்களால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ், தற்போது ஆட்சி செய்யும் பாஜக அரசுகளால் பறிக்கப்பட்ட மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் என உறுதி அளித்திருப்பதற்கு புதுச்சேரி அதிமுக சார்பில் நன்றியையும், வாழ்த்துக்களையும் கழக பொதுச்செயலாளருக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
மாநில அந்தஸ்து சம்பந்தமாக மத்தியில் ஆளும் பாஜகவும், ஏற்கனவே மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் திமுகவும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிருத்தி பொய் வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு மேலாக திமுக காங்கிரஸ் மத்திய கூட்டணி ஆட்சியில் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கவில்லை. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியிலும் தற்போதைய மாநில பாஜக கூட்டணி ஆட்சியிலும் மாநில அந்தஸ்து வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மாநில அந்தஸ்து சம்பந்தமாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கமும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியும் மீண்டும் மாநில அந்தஸ்தை பெற்றுத்தருவோம் என கூறுவது சிறுபிள்ளைத்தனமான செயலாக உள்ளது. இவர்களது இந்த வெற்று வாக்குறுதியை புதுச்சேரி மக்கள் நம்பும் நிலையில் இல்லை. 30 ஆண்டுகளுக்கு மேல் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்தை வழங்காமல் துரோகம் செய்ததை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.
அதே போன்று புதியதாக உருவாக்கப்பட்ட காஷ்மீர், லடாக் ஆகிய சட்டமன்றங்கள் இல்லாத யூனியன் பிரதேசங்களை மத்திய நிதிக்குழுவில் மத்திய பாஜக அரசு சேர்த்துள்ளது. ஆனால் 40 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்றம் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்க்காமல் நிதி ஒதுக்கீடு செய்வதில் மிகப்பெரிய துரோகத்தை நம் மாநிலத்திற்கு பாஜக ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் இந்த துரோக செயலையும் புதுச்சேரி மக்கள் மறந்துவிடமாட்டார்கள். 30 ஆண்டுகளுக்கு முன்பே புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து தேவை என்று மத்திய அரசை வலியுறுத்தி மத்திய அமைச்சரவையில் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற ஒரு முடிவினை ஏற்படுத்தி தந்தவர் எங்களது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆவார். கடந்த ஆண்டு கூட புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்காத மத்திய பாஜக அரசையும், மாநில அந்தஸ்து பெருவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பாஜக என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசையும் கண்டித்து பந்த் போராட்டம் நடத்த ஆணையிட்டவர் எங்களது கழகத்தின் பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் ஆவார்.
மாநில நலனில் அக்கறை உள்ள பல்வேறு அமைப்புகளும். குறிப்பாக சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராக உள்ள திரு. நேரு அவர்களும், சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மாநில அந்தஸ்தை பெற வலியுறுத்தி கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் புதுச்சேரி சட்டமன்றத்தில் ஆட்சியில் உள்ள கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக உள்ள திமுக காங்கிரசாக இருந்தாலும் இதுகுறித்து இந்த 3 ஆண்டு காலத்தில் ஒரு முறை கூட வாய் திறந்து மாநில அந்தஸ்துக்காக குரல் கொடுத்தது இல்லை.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் நம் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருக்கும் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரு சமநிலையை உருவாக்கும் விதத்தில் திரு. நமச்சிவாயம் அவர்களிடம் உள்ள உள்துறை அமைச்சர் பதவியை தானாக முன்வந்து ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். உள்துறை அமைச்சர் என்கின்ற நிலையில் தற்போது அவரிடம் காவல்துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகளின் அமைச்சராக உள்ளார். தேர்தலின் போது அவர் துறை சார்ந்த அரசு இயந்திரங்கள் முழுமையாக அவருக்கு ஆதரவாக செயல்படக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இவ்விஷயத்தில் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே மறைந்த திரு. கண்ணன் அவர்கள் உள்துறை அமைச்சராக இருந்த போது தான் வகித்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத்தான் பாராளுமன்ற தேர்தலில் நின்றார் என்பதை பாஜக கட்சி உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில இணைச் செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் கணேசன் ஆர்.வி திருநாவுக்கரசு, மாநில துணைச்செயலாளர் நாகமணி, புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, தட்டஞ்சாவடி தொகுதி செயலாளர் கமல்தாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.