126-வது இடத்தில் இந்தியா
உலகின் மகிழ்ச்சியான நாடு எது? 126-வது இடத்தில் இந்தியா!
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 126-வது இடத்தை பிடித்துள்ளது.
அண்டை நாடுகளான சீனா 60-வது இடத்தையும், நேபாளம் 93-வது இடத்தையும், பாகிஸ்தான் 108-வது இடத்தையும் பெற்றுள்ளது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் குறித்து ஆக்ஸ்போர்டு நல்வாழ்வு ஆராய்ச்சி மையம், ஐக்கிய நாடுகள் வளர்ச்சி குழு இணைந்து நடத்திய ஆய்வின் முடிவுகள் சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு புதன்கிழமை வெளியிடப்பட்டது.
இந்த ஆய்வானது, ஒவ்வொரு நாடுகளின் ஜிடிபி, தனிப்பட்ட மக்களின் வாழ்க்கை முறை, உடல்நலன், சுதந்திரம் உள்ளிட்டவை அடிப்படையில் நடத்தப்பட்டது.
இதில், தொடர்ந்து 7-ஆவது ஆண்டாக பின்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், இஸ்ரேல், நெதர்லாந்து, நார்வே, லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் முறையே முதல் 10 இடங்களை பெற்றுள்ளது.
உலகின் பெரிய நாடுகள் எதுவும் டாப் 10 இடங்களை பெறவில்லை.
முதல் 10 இடங்களை பெற்ற நாடுகளில் அதிகபட்சமாக நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை 1.5 கோடி. டாப் 20 பட்டியலில் உள்ள கனடா மற்றும் ஐரோப்பா நாடுகளின் மக்கள்தொகை 3 கோடி.
இந்தப் பட்டியலில் இந்தியா கடந்தாண்டு பெற்ற 126-ஆவது இடத்தை தக்கவைத்துள்ளது.
இந்தியாவைவிட லிபியா, ஈராக், பாலஸ்தீனம் மற்றும் நைஜர் போன்ற நாடுகள் முன்னிலையில் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக டாப் 20 பட்டியலில் இருந்து அமெரிக்கா(23) மற்றும் ஜெர்மனி(24) ஆகிய நாடுகள் வெளியேறியுள்ளது.
மொத்தம் 143 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
உலகளவில் வயதுவாரியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், முதியவர்களைவிட அதிகளவிலான இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பது தெரியவந்துள்ளது.