நேரு நவீன இந்தியாவின் சிற்பியா
1964, மே 27ஆம் தேதி அன்றைய பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு இறந்த நாளன்று புகழ்பெற்ற கவிஞர் நாராயண் சர்வே பாடிய வரிகள் இவை. அன்று மக்கள் மத்தியில் நிலவிய உணர்வை இந்த வரிகள் வழியாக அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்தியாவின் மூலை முடுக்குகளிலும் மக்கள் மத்தியில் நேருவின் ஈர்ப்பு காணப்பட்டது. மகாத்மா காந்திக்கு பிறகு நேருவை தாண்டி வேறெந்த தலைவரும் இவ்வளவு பிரபலம் இல்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த அன்று அவர் ஆற்றிய ‘Tryst with Destiny’ (விதியோடு ஒரு ஒப்பந்தம்) உரை அந்த நள்ளிரவிலும் ஏராளமான மக்களுக்கு எழுச்சியூட்டிய ஒன்றாக அமைந்தது.
அவர் எப்போதும் பாரம்பரியமான ஷெர்வானி உடையை அணிவதையே பழக்கமாக வைத்திருந்தார். பின்னாட்களில் அதுவே நேரு உடை என்று பெயர் பெற்றது மட்டுமின்றி இன்று வரையிலும் பிரபலமான உடையாக வலம் வருகிறது.
இந்தியாவில் அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர் நேரு. தொடர்ந்து 16 ஆண்டுகள் அவர் பிரதமராக பணியாற்றியுள்ளார். உண்மை என்னவெனில் இரண்டு முறை பிரதமராக இருந்த அவருக்கு மூன்றாவது முறை அந்த பதவியை வகிப்பதில் விருப்பமில்லை. ஆனாலும், அவர் இறக்கும் வரையிலும் அவர்தான் பிரதமராக பதவி வகித்தார்.
கேரள இலக்கிய விழாவில் உரையாற்றிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், நேரு-இன்வென்ஷன் ஆஃப் இந்தியா புத்தகத்தை எழுதியவருமான சசி தரூர், ” 1958-ல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சில மாதங்கள் இமயமலைக்குச் செல்ல முடிவு செய்தார் நேரு. நாட்டிற்காக பல ஆண்டுகள் சேவை செய்த பிறகு, இது ஓய்வு பெறுவதற்கான நேரம் என்று கருதினார் அவர். எனவே இந்த பொறுப்பை வேறு யாராவது எடுத்துக்கொள்ளுமாறு கேட்டு காங்கிரசின் செயற்குழுவுக்கு கடிதம் எழுதினார்” என்று கூறினார்.
நேருவின் இளமைப் பருவம்
ஒருவரது வாழ்க்கை குறித்து நீங்கள் அறிந்துக்கொள்ள விரும்பினால், முதலில் அவரது குழந்தைப்பருவம் குறித்து அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
தனது குழந்தைப்பருவம் குறித்து தானே கூறியுள்ள நேரு. அதை ‘கொண்டாட்டங்கள் ஏதுமில்லாதது’ என்று குறிப்பிடுகிறார்.
நேருவின் தந்தையான மோதிலால் நேரு அலஹாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தார். அவர் தொழிலில் மட்டுமின்றி அரசியலிலும் முத்திரை பதிப்பவராக இருந்தார். நேருவுக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையில் பெரிய வயது இடைவெளி இருந்தது. அந்த சமயத்தில் அவரது வீட்டில் யாருமே அவரது வயதொத்தவர்களாக இல்லை.
அவர்கள் எப்போதும் தங்களது உறவினர்கள் குறித்து புறணி பேசுபவர்களாக இருந்தனர். இதுவே அந்த சமயத்தில் இருந்த சூழல் மற்றும் அது குறித்து நேருவுக்கு என்ன உணர்வு இருந்தது என்பது குறித்த புரிதலை தருகிறது.
அந்த நேரத்தில், பிரிட்டிஷ் அரசு இந்தியர்களை ஒடுக்கிக் கொண்டிருந்ததை பார்த்து நேரு கோபம் கொண்டார்.
அலஹாபாத்தின் பூங்காக்களில் ஆங்கிலேயர்களுக்கான இருக்கைகள் என தனியாக இருந்தது. அதில் இந்தியர்கள் அமரக்கூடாது. இதை தனது சுயசரிதையில் நேரு பதிவு செய்துள்ளார்.
நேருவுக்கு வீட்டிற்கே வந்து ஆசிரியர்கள் கல்வி கற்றுக்கொடுத்தனர். அவருக்கு சிறு வயதிலிருந்தே கற்பதில் ஆர்வம் இருந்தது. வெறும் பாடப்புத்தகம் மட்டுமின்றி இதர புத்தகங்களை படிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.
குழந்தைப் பருவத்தில் அரேபிய இரவுகள், ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட புத்தகங்களோடு பல்வேறு விதமான நாட்டுப்புற கதைகளை படிப்பதில் அவருக்கு விருப்பம். அலஹாபாத்தின் கங்கா-ஜமானி கலாசாரம் அவரது சிறுவயதில் இருந்தே அவர் மீது செல்வாக்கு செலுத்தி வந்தது வெளிப்படையாகவே தெரிந்தது.
மேலும், அவர்களது குடும்பம் மத சார்பின்மை மற்றும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் கொள்கையோடு வாழ்ந்ததையும் அவர் குறிப்பிடுகிறார். அது தீபாவளியோ, ஜென்மாஷ்டமி அல்லது மொஹரம் என எந்த பண்டிகையாக இருந்தாலும் அனைத்திலும் பங்கேற்பவர்களாக அவர்கள் இருந்தனர்.
வீட்டிலிருந்த ஆண்கள் மத சார்பற்றவர்களாகவும், அதே சமயம் பெண்கள் கடவுளை வணங்குபவர்களாகவும் இருந்ததாக அவர் கூறுகிறார்.
நேரு தனது மேற்படிப்புக்காக இங்கிலாந்துக்கு சென்றார். அங்கு ஹேரோ போர்டிங் பள்ளியில் சேர்ந்தார்.
பின்னர் அவரது 20வது வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அப்போதே அந்த பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களின் அரசியல் விவாதங்களில் பங்கேற்பதில் ஆர்வமிக்கவராக இருந்தார் நேரு. அங்கு விவாதிக்கப்பட்ட உலகளவிலான அரசியல் கருத்துக்களின் மூலமாகவே அவரது உலகம் குறித்த பார்வை மெருகேறியது.
நாட்கள் செல்லச் செல்ல இங்கிலாந்தின் அறிவியல் சிந்தனையாளர்களின் வழியாக தனது அறிவை மேலும் வளர்த்துக்கொண்டார்.
பட்டம் பெற்ற பிறகு என்ன செய்வது என்ற கேள்வி அவர் முன் வந்து நின்றது. இந்நிலையில் அவருக்கு பட்டயத் தேர்வில் பங்கேற்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், அதற்காக அவர் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
காரணம் அந்த தேர்வில் பங்கேற்க 23 வயது நிரம்பியிருக்க வேண்டும். எனவே மூன்று வருடங்கள் காத்திருப்பது சரியாக இருக்காது என்றே அவர் முடிவெடுத்தார்.