ஜப்பான் கடலில் மூழ்கிய தென் கொரிய சரக்குக் கப்பல்
தென் கொரிய கொடி வைக்கப்பட்டிருந்த சரக்கு கப்பல் ஜப்பான் நாட்டின் யாமாகுச்சி பகுதி கடலில் மூழ்கியது. இந்த விபத்தில், பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2 பேர் மாயமாகியுள்ளனர். மீட்புப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டு மேற்கு பகுதியில் இருக்கும் யாமாகுச்சி (Yamaguchi) பகுதியில் தென் கொரிய கொடி பொருத்தப்பட்டிருந்த சரக்கு கப்பல் மூழ்கியுள்ளது. இந்த சரக்குக்கப்பல் ரசாயன கப்பல் என தகவல் வெளியாகியுள்ளது.
Keoyough sun என பெயரிடப்பட்டுள்ள இந்த தென் கொரிய சரக்கு கப்பல் கடலில் ஏற்பட்ட பாதகமான சூழ்நிலையால் நங்கூரம் அமைத்து பயணத்தை மேற்கொண்டது. இன்று காலை சுமார் 7 மணியளவில் இந்த கப்பலில் இருந்தவர்களிடம் உதவிக்காக அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த கப்பலில் மொத்தம் 11 பேர் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுள் 8 பேர் இந்தோனேசியாவை சேர்ந்தவராகும். 2 பேர் தென் கொரியா மற்றும் ஒருவர் சீனாவை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
சரக்கு கப்பலில் பயணித்த 11 பேரில் 7 பேர் இறந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், இரண்டு பேர் நீரில் தத்தளிக்க மீட்புக்குழுவினர் அவர்களை மீட்டுள்ளனர். இன்னும் இருவரின் நிலை என்னவென்று தெரியாத சூழல் உள்ளது. இந்த இருவரை தேடும் பணியை ஜப்பான் கடலோர காவல்படையினரும் மீட்புக்குழுவினரும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர் .