வெற்றிகரமான அணி
சென்னை : ஐபிஎல் தொடரிலேயே வெற்றிகரமான அணி என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளைத் தான் மாறி மாறி பலரும் குறிப்பிடுவார்கள். ஆனால், உண்மையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் வெற்றிகரமான அணி என ஒரு புள்ளி விவரம் தெளிவாக கூறுகிறது.2008 முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வரும் அணிகளிலேயே அதிக வெற்றி சதவீதம் வைத்துள்ள அணி சிஎஸ்கே தான் என அந்த புள்ளி விவரம் கூறுகிறது. சிஎஸ்கே அணி 225 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 131 வெற்றிகள் பெற்றுள்ளது. அதன் வெற்றி சதவீதம் 59 ஆகும். அடுத்த இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. அந்த அணி 247 போட்டிகளில் 138 வெற்றிகள் பெற்றுள்ளது. இதன் வெற்றி சதவீதம் 56.7 ஆகும். குறைந்தது 150 போட்டிகளில் ஆடிய ஐபிஎல் அணிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது.அதே சமயம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி 33 போட்டிகளில் 23 வெற்றிகள் பெற்று, 69.7 வெற்றி சதவீதம் பெற்றுள்ளது. இரண்டு ஆண்டுகள் முன்பு துவக்கப்பட்ட மற்றொரு அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 58.6 வெற்றி சதவீதம் வைத்துள்ளது. இது சிஎஸ்கே அணியை விட குறைவான வெற்றி சதவீதம் என்றாலும் மும்பை இந்தியன்ஸ் அணியை விட அதிக வெற்றி சதவீதத்தை வைத்துள்ளது.எனினும், 150 போட்டிகளுக்கு மேல் ஆடிய அணிகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் சிஎஸ்கே அணியே முதல் இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி குறைந்தது 150 போட்டிகளில் பங்கேற்ற பின்னரே சிஎஸ்கே அணியுடன் ஒப்பிட முடியும். ஏனெனில், சில ஆண்டுகளில் தொடர் தோல்விகள் ஏற்படக் கூடும்.
மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே என இரண்டு வெற்றிகரமான ஐபிஎல் அணிகளுமே சில ஆண்டுகளில் மிக மோசமாக செயல்பட்டு பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் போயுள்ளன. எனவே, நாம் 150 போட்டிகளுக்கு மேல் ஆடிய அணிகளின் வெற்றி சதவீதத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு வெற்றி சதவீதத்தை கணக்கிட்டு பார்த்தால் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடிக்கின்றன.அடுத்த இரண்டு இடங்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 50.6 வெற்றி சதவீதத்துடனும், ராஜஸ்தான் ராயல்ஸ் 50.5 வெற்றி சதவீதத்துடனும் உள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 49 வெற்றி சதவீதத்துடனும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 47.6 வெற்றி சதவீதத்துடனும், பஞ்சாப் கிங்ஸ் 46.1 வெற்றி சதவீதத்துடனும், டெல்லி கேபிடல்ஸ் 45.8 வெற்றி சதவீதத்துடனும் உள்ளன.
செய்தி பாபு சென்னை.