போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய சோதனையின் போது போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூளையாகச் செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கை விசாரிக்க முயன்றபோது தலைமறைவாகிவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவரது 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. மேலும் அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார்.