‘முக்கியத்துவம் பெற போகும் தென் மாவட்டங்கள்’

குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது. முதல் கட்டமாக எஸ் எஸ் எல் வி ராக்கெட்டுகளை விண்ணில் அனுப்பும் அளவிற்கு அடுத்த இரண்டு வருடத்தில் முழு ராக்கெட் தளமும் கட்டி முடிக்கப்பட உள்ளது.

வருடத்திற்கு சராசரியாக 24 ராக்கெட்டுகளை விண்ணில் அனுப்ப திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட் ஏவுதளம், தென் தமிழ்நாட்டில் ஒரு பொருளாதார கேந்திரமாக விளங்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஏற்கனவே குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தை மத்திய அரசு அறிவித்த உடனேயே தமிழக அரசின் சார்பில் 2000 ஏக்கரில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான திட்டம் வரையறை செய்யப்பட்டது.

அதன்படி ராக்கெட்டுக்கான உதிரிப் பாகங்கள், இஞ்சின் வடிவமைப்பு, செயற்கைக்கோள் வடிவமைப்பு, சென்சார்கள் உருவாக்கம் போன்ற நிறுவனங்களும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் அந்த பகுதியில் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ராக்கெட்டுக்கான திட எரிபொருளை சிவகாசியில் இருந்து பெற முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

பட்டாசுகளுக்கான வெடி மருந்துகள் சிவகாசியிலேயே உள்ள சில ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. சிவகாசியில் மொத்தமாக 1,070 பட்டாசு தொழிற்சாலைகள் இருக்கும் நிலையில் அவற்றுக்குத் தேவையான வெடி மருந்து சிவகாசியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தே எடுத்து வரப்படுகிறது.

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்த பின், ராக்கெட்டுகளுக்கு தேவையான திட எரிபொருளை, சிவகாசியில் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக மூத்த விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் தெரிவிக்கிறார். இதனால் பல நெருக்கடிகளை சந்தித்துவரும் சிவகாசி பட்டாசுத் தொழிலுக்கு புத்துயிர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.