50 நிமிடங்கள் நின்று போன இதயம்… மருத்துவக் கணிப்பை தாண்டி உயிர்பெற்ற நபர்
மருத்துவ துறையில் கணிக்க முடியாத பல நிகழ்வுகள் நடக்கும். அந்த வகையில் 50 நிமிடங்கள் வரை இதயத்துடிப்பு நின்று போன ஒருவர் மீண்டும் உயிர்பெற்ற சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த பென் வில்சனுக்கு 31 வயதாகிறது. இவர் போக்குவரத்து நிர்வாகப் பணியாளராக வேலை செய்கிறார். கடந்த ஜூன் மாதம் வீட்டில் இருந்த பென் வில்சன் இதயம் வலிக்கிறது என்று கூறியபடியே தன் பார்ட்னர் ரெபெக்கா ஹோம்ஸ் மீது சாய்ந்துவிட்டார்.
உடனடியாக மருத்துவ உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதேசமயம் சுயநினைவின்றிக் கிடந்தவருக்கு CPR வழங்கத் தொடங்கி இருக்கிறார், ரெபெக்கா. அங்கு விரைந்த அவசர மருத்துவ குழு பல முயற்சிகளை மேற்கொண்டாலும் குடும்பத்தினரிடம் இழப்புக்குத் தயாராக இருக்கும்படி கூறியுள்ளனர்.
அவரின் இதயம் 50 நிமிடங்களுக்கு இடையில் இரண்டு முறை மட்டுமே துடித்துள்ளது. அவருக்கு 17 முறை டீஃப்ரிலேட்டர் (defibrillator) மூலமாக எலெக்ட்ரிக் கரன்ட் செலுத்தப்பட்டது.
மருத்துவ ரீதியாக மாரடைப்பு காரணமாக இதயத்துடிப்பு நின்றுவிட்டதாகக் கூறப்பட்டாலும், கணிப்பைத் தாண்டி அவர் அதிலிருந்து மீண்டார். அறுவை சிகிச்சைக்குப் பின், மூளையை ஆக்ஸிஜன் பற்றாக்குறையிலிருந்து பாதுகாக்க ஐந்து வாரங்கள் மருத்துவ ரீதியாக தூண்டப்பட்ட கோமாவில் வைத்தனர். அதிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் படிப்படியாக நடக்கவும் பேசவும் செய்தார்.