தென்னக இரயில்வே துறைக்கு வைகோ கோரிக்கை

கரிவலம்வந்தநல்லூர் இரயில் நிலையத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தென்னக இரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்துள்ளார். இரயில்வே திட்டங்கள் குறித்து இன்று மதுரையில், தென்னக இரயில்வே பொதுமேலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. வைகோ எம்.பி. அனுப்பியுள்ள கோரிக்கையில்,

1. கரிவலம்வந்தநல்லூர் இரயில் நிலையத்தை மீண்டும் தொடங்க வேண்டும்.
2. இரயில் எண். 16721/16722 மதுரை-கோவை எக்ஸ்பிரஸ், வணிகர்கள் மற்றும் பிற பயணிகளின் நலன் கருதி திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட வேண்டும். தற்போது மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை ரயில் இல்லை.
3. மதுரை – கோவை பிரிவு அகல இரயில் பாதையாகி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இதற்காக இரயில்வே செலவழித்த தொகை சுமார் 750 கோடி. இப்பாதையில் தற்போது ஒரே ஒரு தினசரி இரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. மதுரை மற்றும் கோயம்புத்தூர் இடையே மீட்டர் கேஜ் பாதையில் 5 ஜோடி இரயில்கள் இயக்கப்பட்டன. எனவே, இராமேஸ்வரம்- செங்கோட்டையில் இருந்து கோவைக்கு கூடுதல் இரயில்கள் இயக்க வேண்டும்.
4. மதுரை-பெங்களூரு இடையே காலையில் செல்லும் வகையில் எக்ஸ்பிரஸ் இரயிலை இயக்க இரயில்வே நிர்வாகம் 2013ல் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அது நிறைவேற்றப்படவில்லை. எனவே மதுரையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் இரயிலை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும்.
5. கொங்கன் இரயில்வே தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னும் தமிழக மக்களுக்கு கொங்கன் இரயில்வேயின் பலன் கிடைக்கவில்லை. தற்போது, மக்களின் அதிக ஆதரவுடன் கொங்கன் இரயில்வே வழியாக திருநெல்வேலி மற்றும் மும்பை இடையே ஒரு வாராந்திர எக்ஸ்பிரஸ் இரயில் (22630/22629) இயக்கப்படுகிறது. இந்த இரயிலை, திருநெல்வேலி மற்றும் மும்பை இடையே தினசரி எக்ஸ்பிரஸ் இரயிலாக மாற்ற வேண்டும். இந்த வழித்தடத்தில் மும்பையை விரைவில் சென்றடையலாம்.
6. சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி மற்றும் செங்கோட்டையிலிருந்து பெங்களூர்/மைசூர் நோக்கிச் செல்வதற்காக 16235 மைசூரு எக்ஸ்பிரஸ்ரைப் பிடிக்கச் செல்லும் பயணிகள் விருதுநகர் செல்ல வேண்டி இருக்கிறது. இதற்கான இணைப்பு இரயிலாக (வண்டி எண் 06503) உள்ளது. அதேசமயம், மைசூரில் இருந்து திரும்பும்போது, வண்டி எண். 16236 மதுரையை காலை 07:25 மணிக்கு வந்தடைகிறது. ஆனால் செங்கோட்டை நோக்கி செல்லும் இரயில் (வண்டி எண் 06504) மதுரையில் இருந்து காலை 07:10 மணிக்கு புறப்பட்டு விடுகிறது. இதனால் மதுரையில் இருந்து தங்கள் பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் பேருந்து அல்லது வேறு போக்குவரத்தையே நாட வேண்டி இருக்கிறது. எனவே 16236 எக்ஸ்பிரஸ் இரயில் ஆறரை மணி நேரத்தில் மதுரையை அடையும் வகையில் இரயிலின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.