முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமான பதிலடி!
இந்திய ஒன்றிய ஆட்சி மாற்றமே இனிய பிறந்தநாள் பரிசாகும் என திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்; பிறந்தது முதலே தி.மு.க.காரன் என்பதுதான் என் நிரந்தரப் பெருமிதம். அதற்குக் காரணம், நம்மை இன்றும் இயக்கும் ஆற்றலாக விளங்குபவர் கலைஞர். எனக்கு நினைவு தெரிந்த வயது முதல், என் பிறந்தநாளான மார்ச் 1-ஆம் நாளன்று தலைவர் கலைஞரையும், தாயார் தயாளு அம்மா அவர்களையும் வணங்கி வாழ்த்துகள் பெறுவதே என் முதல் கடமையாக இருக்கும். இப்போதும் தலைவர் கலைஞர் படத்தின் முன் வணங்குகிறேன். அம்மாவை அரவணைத்து வாழ்த்து பெறுகிறேன்.
உடன்பிறப்புகளாம் உங்கள் முகம் கண்டு உவகை கொள்கிறேன். உங்களின் வாழ்த்துகள்தான், நான் ஓயாமல் உழைத்திட ஊக்கம் தருகின்றன. நம் உயிர்நிகர் கலைஞரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், சென்னை கடற்கரையில் பேரறிஞர் அண்ணா துயிலுமிடத்திற்குப் பக்கத்தில், சட்டப் போராட்டத்தின் வழியாக இடத்தைப் பெற்று, முத்தமிழறிஞர் கலைஞர் நிரந்தர ஓய்வெடுத்திடச் செய்தோம். அப்போது, கழகத்தின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி அமையவில்லை. அடுத்த மூன்றாண்டுக்குள் ஆட்சி அமைந்தபிறகு, தன் அண்ணன் அருகில் ஓய்வெடுக்கும் தலைவருக்கு நினைவிடம் எழுப்பிடத் தீர்மானித்தோம்.