மத்தியில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?
மக்களவைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் வெவ்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளில் வேகம் கூட்டி வருகின்றன.இழுபறி நீடித்த கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் இறுதிக்கட்டத்தை எட்டி தொகுதிப் பங்கீடு என்ற அளவுக்கு நகர்ந்துள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸை உள்ளடக்கி நாடு முழுவதும் உள்ள முக்கிய எதிர்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணிக்கும் தான் கடும் போட்டி உருவாகியுள்ளது.பாஜக இரு முறை தொடர்ச்சியாக வென்று ஆட்சியமைத்துள்ள நிலையில் மூன்றாவது முறையாக வென்று மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா, பாஜகவை தோற்கடித்து இந்தியா கூட்டணி தங்களது பலத்தை நிரூபிக்குமா என்ற விவாதங்கள் நாடு முழுவதும் நடைபெறுகிறது. மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிய தொடர்ந்து கருத்துக் கணிப்புகள் நடைபெறுகின்றன.