பலத்த பாதுகாப்பு… போக்குவரத்து மாற்றம்
தமிழ்நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அதேபோல், நாளை தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்நிலையில், பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி, பல்லடத்தில் இன்று ஒருநாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது
இதேபோன்று, திருச்சி, கரூரில் இருந்து பல்லடம் வந்து பொள்ளாச்சி, உடுமலை வழி கேரளா செல்லும் வாகனங்கள் தண்ணீர்பந்தல், தாராபுரம், பொள்ளாச்சி வழியாக செல்ல வேண்டும். அத்துடன், பொள்ளாச்சி, உடுமலையில் இருந்து திருப்பூர் செல்லும் வாகனங்கள் குடிமங்கலம் நால்ரோடு, அவினாசிபாளையம் வழி செல்ல காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், திருப்பூர் மாவட்டத்தில் சுங்கம் மார்க்கமாக கனரக வாகனங்கள் இன்று இரவு 9 மணி வரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பிரதமர் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. விழா மைதானம், ஹெலிகாப்டர் வந்திறங்கும் மைதானம் உள்ளிட்டவை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.