பாதுகாப்பு பணியில் 5000 போலீசார்…
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த மாதப்பூரில், 1,400 ஏக்கர் பரப்பளவில், பா.ஜ. மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண்; என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா மற்றும் பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பொதுக்கூட்டம் ஆகியன நாளை (பிப். 27) நடக்கின்றன. மூன்று கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேற்று காலை, சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, மாநாடு நடக்கும் இடத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 4,550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நேற்று முன்தினமே போலீசார் வரவழைக்கப்பட்டனர், யாருக்கு எங்கு பணி ஒதுக்குவது என்பது குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, பணிகள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
பொதுகூட்ட மேடை, 80 அடி நீளம், 40 அடி அகலம், 8 அடி உயரத்துக்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மதியம், 2:10 மணிக்கு பிரதமர் மேடைக்கு வருகிறார்.மேடைக்கு எதிரே, 650 அடி அகலம், 25 அடி உயரத்தில் பார்லிமென்ட் வடிவில் ‘பிளக்ஸ்’ அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக, கடலூரில் இருந்து குழுக்கள் வந்துள்ளன. 20 ஆயிரம் போக்கஸ் லைட்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தொண்டர்களுக்கு உணவு வழங்கும் வகையில், ஐந்து இடங்களில் ‘செட்’ அமைக்கப்பட்டுள்ளது. 200 தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.