எடப்பாடி பழனிசாமி பரபர பேட்டி
கூட்டணி பற்றி விஷம பிரச்சாரம் செய்யப்படுகிறது என்றும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கூட்டணியை அறிவிப்போம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன. ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு, அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட குழுக்களை அமைத்து பணியாற்றத் தொடங்கியுள்ளன.
திமுக தலைமையில் ஏற்கனவே உள்ள கூட்டணி இந்த தேர்தலிலும் களம் இறங்குகிறது. இதில் இந்திய ஜனநாயகக் கட்சி மட்டும் ஏற்கெனவே பாஜகவில் இணைந்துவிட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சி புதிதாக திமுக கூட்டணியில் இணைய உள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் உட்பட திமுக கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதி விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவுடன் இணைந்து பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. பாமக 7 தொகுதியிலும்., தேமுதிக 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆனால், இம்முறை அதிமுக – பாஜக கூட்டணி பிளவுபட்டுள்ளதால் அதிமுக கூட்டணியா, பாஜக கூட்டணியா என்னும் பெரும் குழப்பத்தில் இருக்கிறது பாமகவும் தேமுதிகவும்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வென்று தமிழகத்தின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிப்பார்கள். மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் பிரச்சாரம் இன்று முதல் தொடங்கிவிட்டது.