பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய மாணவர்கள்
கூடலூரில் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்த மாணவர்களை வீடு தேடிச் சென்று அழைத்து வந்து பள்ளியில் சேர்த்து விட்ட காவலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பழங்குடி கிராமங்களில் பள்ளிக்குத் தொடர்ச்சியாக வராத மாணவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். இதில் குறிப்பாக, புளியம்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அருகில் உள்ள காப்பிகாடு, கோழிக்கொல்லி போன்ற பழங்குடியின கிராமங்களில் உள்ளனர். இன்று பத்தாம் வகுப்பு செயல்முறை தேர்வு தொடங்கிய நிலையில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் மற்றும் பிற வகுப்புகளில் படிக்கும் 5 மாணவர்கள் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனையறிந்த பள்ளி ஆசிரியர்கள் பலமுறை நேரில் சென்று அழைத்த போதும், அவர்கள் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே இருந்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் உஷா தேவி மற்றும் காவலர் அழகு ஆகிய இருவரும், மாணவர்களிடம் பேசி அவர்களை கையோடு பள்ளிக்கு அழைத்து வந்து, செயல்முறை தேர்வை எழுத வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.