மதுரையை மையம் கொண்ட அரசியல் கட்சிகள்

மகாத்மா காந்தி.. காமராஜர் என நூற்றாண்டு காலமாக அரசியல் மாற்றங்களை ஏற்படுத்திய மதுரையில் தனது தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டை நடத்தப்போகிறாராம் விஜய். தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த எம்ஜிஆர் முதல் தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள விஜய் வரைக்கும் மதுரையை மையமாக வைத்தே அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளனர்.

கடந்த 1921 செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்த மகாத்மா காந்தி மதுரை மண்ணில்தான் அரையாடையை அணியத் தொடங்கினார். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய அரசியல் நிகழ்வுகளை தீர்மானிக்கும் நகராக மதுரை இருந்து வருகிறது.

கடந்த 1945ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தமிழக தலைவரை தேர்ந்தெடுப்பதில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டிருந்தது. அப்போது மதுரை திருப்பரங்குன்றத்தில்தான் காங்கிரஸ் செயற்குழு கூடி காமராஜரை தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் தலைவராக தேர்வு செய்தது. காமராஜருடைய மிகப்பெரிய அரசியல் வளர்ச்சிக்கு இந்த திருப்பரங்குன்றம் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.

அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் முதன் முதலாக இடைத் தேர்தலை எதிர்கொண்டு வென்றது அப்போதைய மதுரை மாவட்டத்தின் திண்டுக்கல் லோக்சபா தொகுதிதான். திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்ஜிஆரின் வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார். இப்படி எம்ஜிஆருக்கும், மதுரைக்கும் இடையே நிறைய அரசியல் தொடர்புகள் உண்டு.

மதுரையில் அரசியல் பயணத்தைத் தொடங்கினால் வெற்றிபெறலாம் என்ற சென்டிமென்ட் உருவாக காரணமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். ஆரம்ப காலத்தில் அவரது அரசியல் வளர்ச்சி மதுரையை மையமாகக் கொண்டே இருந்தது. 1950களில் முதலாவது எம்ஜிஆர் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டதும் இதே மாமதுரை மண்ணில்தான். 1974ஆம் ஆண்டு தமது கொள்கையே அண்ணாயிசம் என எம்ஜிஆர் அறிவித்ததும் மதுரையில்தான்.

அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளவர் நடிகர் விஜய். நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துக் கடந்த சில ஆண்டுகளாகவே பேச்சு உள்ளது. அதற்கேற்ப விஜய்யின் படங்களிலும் அரசியல் வசனங்கள் தவறாது இடம் பெறுகின்றன. தலைவா படத்தில் டைம் டூ லீட் என்ற வாசகம் இடம் பெற்றது.

கத்தி, மெர்சல், சர்க்கார் என அடுத்தடுத்த படங்களிலும் அரசியல் வசனங்கள் இடம் பெற்றன. ஆடியோ வெளியீட்டின் போது அரசியல் திட்டம் குறித்துத் தொடர்ந்து மறைமுகமாக வெளிப்படுத்தி வருபவர் விஜய். ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாளின் போது அவரது ரசிகர்கள் ஒட்டும் வாழ்த்து போஸ்டரில் அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுப்பார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் ஆழம் பார்த்த விஜய், அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார். 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை மையமாக வைத்துதான் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு பிறந்த நாளில் போது மதுரையில் போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள், ‘2024 பாராளுமன்றமே, 2026ன் தமிழக சட்டமன்றமே ‘ விரைவில் மதுரையில் மாநாடு என்று போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் தனது தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாட்டை விஜய் நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்திரை மாதத்தில் சிறப்பாக சம்பவம் செய்ய காத்திருக்கின்றனர் மதுரை ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published.