மஹா., முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்
மும்பை: மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி மாரடைப்பு காரணமாக இன்று (பிப்.,23) காலமானார். அவருக்கு வயது 86.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவருமான மனோகர் ஜோஷி கடந்த 21ம் தேதி மாரடைப்பு காரணமாக பி.டி.ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்து இருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும் நேற்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரிக்கப்படாத சிவசேனாவின் மூத்த தலைவராக விளங்கிய மனோகர் ஜோஷி கடந்த 1995 முதல் 1999 வரை மஹாராஷ்டிர முதல்வராக பணியாற்றியுள்ளார். பின்னர் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட அவர், வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 2002 முதல் 2004 வரை லோக்சபா சபாநாயகராகவும் இருந்துள்ளார்.