தலைமை தேர்தல் ஆணையர் சென்னை வருகை
நாளை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராகி வரும் நிலையில், தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் களப்பணிகள் வேகமெடுத்துள்ளன. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கடந்த 6ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் அஜய்பாது தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மற்றும் பல்துறை அதிகாரிகள் இந்த ஆலோசனையில் கலந்துகொண்டனர்.
சென்னை விமான நிலையத்தில் அவர்களை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இதையடுத்து இன்று காலை 11 மணியளவில் தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு நேரில் சந்தித்து தேர்தல் தொடர்பான கருத்துகளை கேட்டறிய உள்ளது.
அதன் பின் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர், தமிழ்நாடு டிஜிபி மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறும். 2 நாட்கள் ஆலோசனை கூட்டங்களில், தமிழ்நாட்டில் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைத்திருப்பது, அமைதியான, நேர்மையான முறையில் ஒரே நாளில் தேர்தலை நடத்தி முடிப்பது, அதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது உள்ளிட்டவை உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதன் பின் மதியம் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.