பறிபோன உயிர்.. தாய், மகள் அதிரடியாக கைது
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்த போது ஏற்பட்ட தகராறில், தாக்கப்பட்ட பெண் பரிதாபமாக இறந்து போனார். குழாயடி சண்டையில் ஈடுபட்டது தொடர்பாக தாயுடன், கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரைச் சேர்ந்த வெங்கடேசன், அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முனியம்மாள் (வயது 37). இந்த தம்பதிக்கு 3 மகள்கள் இருக்கிறார்கள். வெங்கடேசன் வசிக்கும் அதே தெருவில் வசிப்பர் சங்கர். இவரது மனைவி சாந்தி (38). இவர்களது மகள் வள்ளி (20). இவர், தண்டையார்பேட்டை அரசு கலை கல்லூரியில் பி.ஏ இறுதியாண்டு படித்து வருகிறார்.
முனியம்மாள் வீட்டின் அருகே தெருக்குழாய் இருக்கிறது நேற்று முன்தினம் மாலை சாந்தி மற்றும் அவரது மகள் வள்ளி இருவரும் பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் பிடித்து முனியம்மாள் வீட்டு வாசலில் வைத்துவிட்டு போனார்
இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சாந்தியும், வள்ளியும் சேர்ந்து முனியம்மாளை கைகளால் சரமாரியாக தாக்கினார்களாம். மேலும் உருட்டுக்கட்டையாலும் முனியம்மாளை அடித்து கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சண்டையில் இருந்து விலக்கிவிட்டு சமாதானம் செய்து வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த முனியம்மாள், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மேலும் இதுபற்றி வண்ணாரப்பேட்டை போலீசில் கல்லூரி மாணவி மற்றும் அவரது தாயார் மீது புகார் செய்தார். புகாரை பெற்றுக் கொண்ட வண்ணாரப்பேட்டை போலீசார் முனியம்மாளை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் திடீரென முனியம்மாளுக்கு உடல் நிலை மோசம் அடைந்தது. உடனடியாக அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளார் அவரது மகள். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முனியம்மாள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்
இந்த விவகாரத்தில் வண்ணாரப்பேட்டை போலீசார் கொலைக்குற்றம் ஆகாத மரணம் விளைவித்தல் சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து சாந்தி மற்றும் அவரது மகள் வள்ளியை கைது செய்துள்ளனர்.