நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் கெடு வைத்த நடிகை த்ரிஷா
தன்னை பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜுவுக்கு நடிகை த்ரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில், கடந்த 2017ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், நடிகை த்ரிஷாவின் பெயரையும் வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த பிரச்சனைக்கு இயக்குநர் சேரன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், தற்போது நடிகை திரிஷா தன்னை பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜுவுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 24 மணி நேரத்தில் ஏவி ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தமிழ் ஆங்கில செய்தித்தாள்களில் மன்னிப்புக் கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்களிலும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும் என்று நடிகை திரிஷா வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு, மன்னிப்பு கேட்காவிட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் நடிகை த்ரிஷா அந்த நோட்டீஸில் எச்சரித்துள்ளார். இந்த நோட்டீசை தனது X தளத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.