பேரவையில் இ.பி.எஸ் வெளிநடப்பு
சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில் திருப்தி இல்லை எனக் கூறி அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடகா அரசு குறிப்பிட்டு வருவது தொடர்பாக இன்று சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பேசினார்
அப்போது, “தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாதுவில் கர்நாடகாவால் அணை கட்ட முடியாது. மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடகா அரசு பேசலாம். ஆனால் செயல்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் பிறந்த யாரும் மேகதாது அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டார்கள்.மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட கர்நாடக அரசு வைக்க திமுக அரசு அனுமதிக்காது” என்று கூறினார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க கர்நாடகா அரசு கோரியபோது தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். கர்நாடக அரசைக் கண்டித்து ஏன் பேரவையில் அரசு தீர்மானம் கொண்டுவரவில்லை? என்று கேள்வி எழுப்பினார். மேகதாது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பான அமைச்சரின் பதிலில் திருப்தி இல்லை என்றும் அவர் கூறினார்.