மத்திய அரசை கடுமையாக சாடும் எதிர்க் கட்சிகள்

வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தொடர்ந்து தடை விதித்துள்ள நிலையில், எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

வெங்காய ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு மார்ச் 31,2024 வரை நீடித்துள்ளது. இந்நிலையில் மத்திய பா.ஜ.க அரசை எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். வெங்காய ஏற்றுமதி மீதான தடையை நீக்குவது குறித்து பொய்யான கூற்றுக்களை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு கூறிவருவதாக என்.சி.பி (சரத் பவார்) அணி புதன்கிழமை விமர்சனம் செய்துள்ளது. 

கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், “வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையை நீக்குவது தொடர்பாக அரசாங்கம் எங்களை ஏமாற்றியுள்ளது. அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த அரசாங்கத்திற்கு ஒரே ஒரு குறிக்கோள் உள்ளது. அது வணிகர்களைப் பாதுகாத்தும், விவசாயிகளைக் கொல்வதும் ஆகும்” என்று அவர் கூறினார்.

அரசின் தரவுகளின்படி, நடப்பு ரபி பருவத்தில் மொத்தம் 4.32 லட்சம் ஹெக்டேரில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 86 லட்சம் டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்படும். வெங்காய ஏற்றுமதிக்கு தடை தொடர்வது வெங்காயத்தின் விலையை மேலும் குறைத்து,  விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று பாட்டீல் கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, பா.ஜ.க தலைவரும் மகாராஷ்டிராவின் துணை முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் வெங்காய  ஏற்றுமதி தடையை மத்திய அரசு நீக்கியதற்காக நன்றி தெரிவித்தார். வெங்காய ஏற்றுமதி மீதான தடையை நீக்கிய மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றி!. 

வெங்காயம் விவசாயிகளின் பல்வேறு கேள்விகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்பாய் ஷா மற்றும் பியூஷ் கோயல் ஆகியோருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம் என்று ஃபட்னாவிஸ் கூறினார். எவ்வாறாயினும், வெங்காய ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு மார்ச் 31,2024 வரை நீடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.