பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்! யார் இவர்?
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு கூட்டணி ஆட்சி நடைபெற உள்ளது. நவாஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் பூட்டோவின் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ள நிலையில் மீண்டும் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்க உள்ளார். இதனால் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஏமாற்றமடைந்துள்ளார்.
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதற்கிடையே தான் கடந்த8 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும் 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
இதனால் இந்த 70 தொகுதிகளை தவிர்த்து 266 தொகுதிகளுக்கு அன்று தேர்தல் நடக்க இருந்தது. இதில் ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால் 265 தொகுதிகளுக்கு கடந்த 8 ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் 133 தொகுதிகளை வெல்ல வேண்டும். மேலும் இடஒதுக்கீடு தொகுதியை சேர்த்து பார்த்தால் மொத்தம் 169 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தனித்து ஆட்சியை பிடிக்கலாம்.
அதாவது பாகிஸ்தானில் கடந்த முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைத்து இம்ரான் கான் பிரதமரானார். அதன்பிறகு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அவரது ஆட்சி கவிழ்ந்தது. இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். இதையடுத்து பிஎம்எல்-என் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தது. அதில் பிரதமரானவர் தான் ஷெபாஸ் ஷெரீப். இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது