புத்தாண்டு வரலாறு..
ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த வரலாறு….!
அகிலமே இனம்,மதம்,மொழிகளைக் கடந்து வரவேற்றுக் கொண்டாடும் ஒரே பண்டிகை ஜனவரி முதலாம் திகதி. இம்முறை இப்புத்தாண்டு 01.01.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை பிறக்கின்றது. இவ்வாங்கிலப் புத்தாண்டை மத, இன, மொழி வேறுபாடில்லாமல் மக்கள் சிறப்பாக வரவேற்று மகிழ்கின்றனர். நியூசிலேண்ட் நாட்டின் சமோவா பகுதியில்தான் முதன்முதலில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. இலங்கை நேரப்படி டிச. 31-ம் திகதி மாலை 4.30 மணிக்கு அங்கே புத்தாண்டு பிறந்து விடுகிறது. அடுத்தபடியாக ஒஸ்ட்ரேலியாவில் மாலை 6.30 மணியளவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கின்றது.
இப்புத்தாண்டை பட்டாசுகளை வெடித்தும் வான வேடிக்கைகளை நிகழ்த்தியும் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். இனிப்புகளைப் பரிமாறியும் பூக்களை வழங்கியும் புத்தாண்டு தருணங்கள் நினைவில் இருத்தப்படுகின்றன.
உலகெங்கும் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி
1ஆம் திகதி ஆங்கிலப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இதற்குப் பின்னால் ஒரு சுவாரஷ்ய வரலாறு இருக்கிறது.
புத்தாண்டு ஆயிரக்கணக்கான ஆண்டு
களாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும் அப்போது ஜனவரி முதலாம் திகதி புத்தாண்டாகக் கொண்டாடப்படவில்லை. அந்தக் காலகட்டத்தில் ரோமானிய நாட்காட்டியில் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. மோர்ஷியஸ் நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட மார்ச் மாதமே முதல் மாதமாக இருந்தது. அதனால் அக்காலத்தில் மார்ச்சில்தான் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
அதைத் தொடர்ந்து ரோமானிய மன்னரான போம்பிலியஸ் இரண்டு மாதங்களைச் சேர்த்து மொத்தம் 12 மாதங்களாக்கினார். ஜனஸ் என்னும் ரோமானியக் கடவுளின் நினைவாக ஜனவரியஸ், பிப்ரவரியஸ் மாதங்கள் சேர்க்கப்பட்டன.புகழ்பெற்ற மன்னரான ஜூலியஸ் சீசர், ஜூலியன் காலண்டரை உருவாக்கினார். அதில்தான் ஜனவரி முதலாம் திகதி ஆங்கிலப் புத்தாண்டாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அது உலகம் முழுவதும் பெரும்பாலானோர் பின்பற்றும் கிரிகோரியன் காலண்டரை ஒத்திருந்தது. கடவுள் ஜனஸைக் கௌரவிக்கும் விதமாக ரோமானியர்கள் அம்மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாட ஆரம்பித்தனர். புத்தாடை உடுத்தி மகிழ்ந்தனர். பரிசுகளைப் பரிமாறிக் கொண்டனர்.எனினும் ஜேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ம் திகதியையே (கிறிஸ்துமஸ்) புத்தாண்டாகக் கொண்டாட வேண்டுமென இங்லேண்ட் உள்ளிட்ட நாடுகளில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. அந்நாட்டு மக்கள் டிசம்பர் 25-ம் திகதியைக் கொண்டாடத் தொடங்கினர்.
குழப்பம் நீடித்த நிலையில் கடைசியாக கி.பி. 1500-களில் போப் கிரிகோரி என்பவர், லீஃப் ஆண்டை உருவாக்கி புதிய நாட்காட்டியையும் உருவாக்கினார். இதைத்தொடர்ந்து கிரிகோரியன் நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. இதைத்தான் இன்று முழு உலகமே பின்பற்றி, புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றது.புது வருடத்தில் ஒரு சிலர் புதிய சபதங்களையும்,உறுதிகளையும் மேற்கொள்வர்.இது இன்றோ, நேற்றோ தொடங்கியதில்லை. புத்தாண்டு சபதம் மேற்கொள்வது ஆதிகாலத்தில் இருந்தே வழக்கமாக இருந்திருக்கிறது. போபிலோனியர்கள் புத்தாண்டில் பழைய கடன்களை அடைப்போம் என்றும் கடன் வாங்கிய பொருட்களைத் திருப்பித் தருவோம் என்றும் உறுதி பூண்டனர்.ஆங்கிலப் புத்தாண்டானது அனைத்து இன மக்களாலும்
கொண்டாடப்படும் ஓர் பொது சர்வதேச பண்டிகையாக மாறிவிட்டது….!
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்…!
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை .