கண்ணதாசனும்– எம்.ஜி.ஆரும்…
கண்ணதாசனும்– எம்.ஜி.ஆரும்’
கண்ணதாசனின் கருத்து
தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம்.
“வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு.”
இவ்வாறு, கவியரசரே, ‘எனது சுயசரிதம்’ என்ற நூலில் எழுதியிருப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.
மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படம் ‘மதுரைவீரன்’. இதற்கான திரைக்கதை வசனத்தைத் தீட்டியவர் கவியரசர் கண்ணதாசனே. இப்படத்தில் சில அற்புதமான பாடல்களையும் கவியரசரே எழுதினார்.
‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சிதம்பரம் லேனா செட்டியார் தயாரித்த இப்படத்தை, டி. போகானந்த் இயக்கினார்.
1956 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.
தமிழகத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.
அம்மட்டோ! அக்காலத்தில், ‘டூரிங் டாக்கீஸ்’ என்று அழைக்கப்பட்ட, தென்னங்கீற்று வேய்ந்த திரையரங்குகள் பலவற்றிலும் ‘மதுரை வீரன்’ படம் ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தியது.
1956 – ஆம் ஆண்டிலேயே சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரால் தொடங்கப்பெற்ற தேவர் பிலிம்ஸாரின் முதல் படமான ‘தாய்க்குப் பின் தாரம்’ கண்ணதாசனின் வசனத்திலேயே வளர்ந்து வந்தது. கவிஞர் ‘திர்க்கோஷ்டியூர்’ தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நேர்ந்ததாலும், கழகப்பணிகளில் பெரும் நேரம் செலவிட்டதாலும் கவிஞரின் உதவியாளர் ச. அய்யாப்பிள்ளை அப்படத்தின் வசனங்களைத் தொடர்ந்து எழுதினார். இருப்பினும் கவிஞரின் மேற்பார்வையில் வசனங்கள் மெருகூட்டப்பட்டன. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த இத்திரைப்படம் மகத்தான வெற்றியைக் கண்டது.
ஆக 1956 – ஆம் ஆண்டில், கண்ணதாசன் வசனங்கள் எழுதிய படங்கள் நான்கும் பெருமைக்குரியனவாகவே வெளிவந்தன.
காலத்தை வென்ற பாடல்கள்!
‘அச்சம் என்பது மடமையடா!’
1960 – ஆம் ஆண்டு கண்ணதாசனின் கதை, வசனம், பாடல்களோடு வெளிவந்து, உன்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வெற்றிப்படமாய்த் திகழ்வதே நடேஷ் ஆர்ட் பிக்சர்சாரின் ‘மன்னாதி மன்னன்!’
இப்படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞரின் அனைத்துப் பாடல்களும் கருத்துச்சுவை நிரம்பிய பாடல்களே. இருப்பினும் தமிழக வரலாற்றிலேயே, எத்தனையோ சோதனைகளுக்கு நடுவிலும், வீரத்திற்கும், புகழுக்கும் கட்டியங்கூறும் பாடலாக அமைந்த,
“அச்சம் என்பது மடமையடா!
அஞ்சாமை திராவிடர் உடமையடா!
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு!
தாயகம் காப்பது கடமையடா!”
என்று ஆரம்பமாகி, அனைவரது நாடி நரம்புகளிலும் வீரத்தையும், நெஞ்சங்களில் விவேகத்தையும் உண்டாக்கும் பாடலே உயர்ந்த இடத்தைப் பற்றிக் கொள்ளும் பாடலாகும்!
உண்மைதானே!
கண்ணதாசன் பாடல்களின் சிறப்பு! எம்.ஜி.ஆர். பாராட்டு!
கண்ணதாசன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் இரங்கல் கூட்டம் 24.10.1981 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை அமைச்சராக அன்று பதவி வகித்த ராஜதுரை உரையாற்றம்போது,
“கண்ணதாசன் எழுதிய பாடலைத் தவிர வேறு யார் எழுதிய பாடலையும் இரண்டாவது முறை கேட்கமுடியாது என்று முதல்வர் எம்.ஜி.ஆர். ஒருமுறை பாராட்டிக் கூறினார். முதல்வருக்கும், கண்ணதாசனுக்கும் இடையே ஒரு இடைவெளி இருந்த நேரத்தில் இதனைக் குறிப்பிட்டார்!” என்று கூறினார்.
இரங்கல் கூட்டத்தில் உரையாற்றிய தமிழகத்தின் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். ‘அச்சம் என்பது மடமையடா!’ பாடலை டேப்பில் இருந்து ஒலிக்கச் செய்தார்.
கவியரசர் கண்ணதாசனைப் பற்றி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கூறியுள்ள கருத்துகளில் சிலவற்றைத்தான் இங்கே காணப்போகிறோம்.
“காலக்காற்று இந்த மாபெரும் கவிஞரை எங்கெல்லாமோ அலைக்கழித்தது. எந்தத் துறைமுகத்திற்கு இந்தப் படகு பயணப்பட்டாலும், அங்கெல்லாம் இது சீரோடும், சிறப்போடுமே போற்றப்பட்டது. அவரிடமிருந்த தமிழ்தான் அதற்குக் காரணம்.
மற்றவர்கள் கவிதை எழுதினார்கள். கவியரசு கவிதையாகவே வாழ்ந்தார்.
‘கவிஞர்’ என்றால் அது கண்ணதாசன் ஒருவரைத்தான் குறிக்கும் என்கிற அளவுக்கு அவருக்குப் புகழ் சேர்ந்தது.
பாரதி – பாரதிதாசனுக்குப் பிறகு தமிழுக்கு அவர்தான் என்பது நிலைமை அவர் காலத்தில் வாழ்ந்தது தமிழர்களாகிய நமக்குப் பெருமை. பல கவிஞர்கள் வாழ்க்கைப் பயணத்தை முடித்த பிறகே வாழ்த்தப்பட்டார்கள்.
கவியரசு கண்ணதாசன் வாழ்ந்தபோதே வரலாறாகிவிட்டார். மரணத்திற்குப் பிறகு அவருக்குச் சூட்டப்போகிற கீர்த்தி கிரீடத்தை, வாழ்ந்தபோதே பார்க்கக் கொடுத்துவைத்த கவிஞர்களில் அவரே தலையானவர்.
மற்றவர்கள் சரித்திரம் படித்தவர்கள். கவிஞர் சரித்திரமே படைத்தார். பள்ளியிறுதி பார்க்காத அவர், பழந்தமிழ்ச் சாற்றைப் பருகி, புதுத்தமிழ் பொழிய வாழ்ந்தார் என்பது அதிசயமாகவே இருக்கிறது.
அவர் சொன்னால் கவிதை. அவரை சொன்னதெல்லாம் கவிதை என்று வாழ்ந்தவர் அவர்.
இலக்கியம் படைக்க முடிந்தவர்களால், எளிதான கவிதைகளைப் படைக்க முடிந்ததில்லை. இந்த இலக்கியவேலி, கவியரசு காலத்திலேதான் அவராலேதான் வீழ்த்தப்பட்டது.
‘மாங்கனி’ போன்ற காவியங்களை எழுதிய அவரது கரமே, கோடிக்கணக்கானவர்கள் கேட்டு மகிழ்கின்ற எளிதான, இனிமையான திரைப்படப் பாடல்களையும் எழுதியது. திரைப்படப் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் ஆராய்ச்சிக்குரிய அற்புதங்களாவதற்கு அவரே பெருங்காரணமாக இருந்தார்.
அருவி நடை, ஆன்றபுலமை, அன்புள்ளம், பிள்ளை மனது, உயர்ந்த சிந்தனை – உலகளாவிய பார்வை இவையே கவியரசு கண்ணதாசன்.
நூறு கவிஞர்கள் சேர்ந்து செய்யவேண்டிய இலக்கியப் பணியைக் கவிஞர் அவர்கள் ஒருவரே செய்தார்.
எப்போதோ ஒருமுறை தோன்றுகின்ற இதிகாசக் கவிஞர் அவர்.”
தன்னை இந்த அளவிற்கு ஆய்கின்ற அன்புள்ளம் கொண்ட எம்.ஜி.ஆர் படங்களுக்கு அந்தக் கவியரசர் அள்ளித் தந்த பாடல்களை… இல்லை!…. இல்லை…! பார்போற்றும் பாடல்களைத் தொடர்ந்து நாமும் கார்ப்போமாக.
அதிகமான படங்கள் தந்த
1963 – ஆம் ஆண்டு
மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். நடித்த, அதிகமான திரைப்படங்கள் வெளியான ஆண்டு 1963 – ஆம் ஆண்டாகும். இந்த ஆண்டில் மட்டும் ஒன்பது திரைப்படங்கள் வெளிவந்தன. அவற்றில் ஏறத்தாழ அனைத்துமே வெற்றிகளை ஈட்டிய படங்களே எனலாம்.
இந்த ஒன்பது படங்களில், எட்டுப் படங்களில் கண்ணதாசன் பாடல்களே இடம்பெற்றிருந்தன என்றால் நம் இதயங்களே வியப்பில் விம்முகின்றன அல்லவா!
அவரது பாடல் இடம்பெறாது வெளிவந்த ஒரே படம் மேகலா பிச்சர்ஸ் சார்பில், கலைஞர் கருணாநிதி தயாரித்து, அவரே வசனம் எழுதி, ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த ‘காஞ்சித்தலைவன்’ படம் மட்டுமேயாகும்.
இனி 1963 – ஆம் ஆண்டு, முதன்முதலில் 11.1.63 அன்று வெளியான, ‘பணத்தோட்டம்’ படத்தில் கவிஞர் எழுதிய மகத்தான பாடல்களைப் பற்றிப் பார்ப்போமாக:
வாருங்கள்! சுவைமிகுந்த காதல் பாடலில் எம்.ஜி.ஆரின் பெருமையைப் பேசவைக்கும், இறவாக் கவிஞர் இயற்றிய இன்பம் பொங்கும் பாடலைப் பார்ப்போம்!.
ஆண்: “பேசுவது கிளியா? இல்லை
பெண்ணரசி மொழியா?
கோயில் கொண்ட சிலையா?
கொத்து மலர்க்கொடியா?”
பாடலின் தொடக்கமே, இன்பவாரியில் நம்மை நீந்தச் செய்கிறதல்லவா? அடுத்த வரிகளை வாசியுங்களேன்!
பெண்: “பாடுவது கவியா? இல்லை
பாரிவள்ளல் மகனா?
சேரனுக்கு உறவா?
செந்தமிழர் நிலவா?”
வாசித்தீர்களா? இனி யோசியுங்கள்!
பாடுவது யாராம் கவியா?
ஆமாம்! கவித்துவத்தை உணர்ந்த இரசனைக்குரிய சீமான்தான்!
அவர் யார்? பாரிவள்ளல் மகனா?
அவர்தான் கலியுகப் பாரிவள்ளல் என்று பெயர் பெற்ற பெருமகனார் ஆயிற்றே!
அவர் என்ன சேரனுக்கு உறவா?
ஒரு காலத்தில் முடியுடை மூவேந்தர்களில் முதலிடம் பெற்ற சேரமன்னர்கள் ஆண்ட, வாழ்ந்த பூமியிலே பிறப்பெடுத்த புண்ணியன்தானே!
அவர் என்ன செந்தமிழர் நிலவா?
செந்தமிழர் உள்ளங்களில் எல்லாம் உறவாடி, நித்த நித்தம் நீந்தி வரும் வெள்ளிநிலாவாய்த் திகழ்ந்தவர், திகழ்பவர் அல்லவா எம்.ஜி.ஆர்!
இப்படியெல்லாம் கவிமகனார் கண்ணதாசன் எழுதிய காதல் கவிதையிலேயே எம்.ஜி.ஆர். எனும் ஏந்தலின் பெருமை பேசப்பட்டுள்ளதை அறியும்போது, நமது உள்ளங்களில் உவகைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன அல்லவா?
இன்னும்:
“வில்லேந்தும் காவலன்தானா?
வேல்விழியாள் காதலன்தானா?
கொல்லாமல் கொல்லும் மொழியில்
கோட்டை கட்டும் கவலன்தானா?
மன்னாதிமன்னர்கள் கூடும் மாளிகையா? – உள்ளம்
வண்டாட்டம் மாதர்க்ள கூடும் மண்டபமா?”
இப்படிப் பெண்மையைப் பாடவைத்து, பார்போற்றும் நாயகனின் புகழை ஏற்றிப் போற்றும் விதமே விந்தைதான்!
‘வில்லேந்தும் காவலனாம்!
கோட்டை கட்டும் காவலனாம்!
அவர் உள்ளமோ!
மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையாம்!
மாதர்கள் கூடும் மண்டபமாம்!’
இவையெல்லாம் உண்மைதானே!
வீரத்திருமகனாய், கோட்டையிலே கொலுவிருந்து ஆண்ட காவலனாய்; மன்னாதி மன்னர்களும் கூடிய இல்லம் அவர் இல்லம்! அவர்களைக் குடிவைத்ததோ அவரது உள்ளம்!
அவரது உள்ளம் கோடானகோடி மாதர்களாம் தாய்க்குலத்தையும் மகிழ்வித்த உள்ளந்தானே! இவையனைத்தும் உயர்ந்த உண்மைகள்தானே
ஆண்: “மானல்லவோ கண்கள் தந்தது!
மயிலல்லவோ சாயல் தந்தது!”
என்று தொடங்கும்………..
அடுத்து,
பெண்: “தேக்கு மரம் உடலைத் தந்தது!
சின்ன யானை நடையைத் தந்தது!
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது!
பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது!”
என்று, கதையின் நாயகி, நாயகன் எம்.ஜி.ஆரைப் புகழ்வதுபோல், கவியரசர் படைத்த பாடல் பி. சுசீலாவின் குரலில் ஒலிக்கும்போது, திரையரங்குகளில் ஏற்பட்ட குதூகலங்களை நினைத்தால் இன்றும் நெஞ்சம் குதூகலிக்கிறது.
பொன்மனச் செம்மலை தனது பார்வையில் இப்படியெல்லாம் படம்பிடித்துக் காட்டி மகிழ்ந்தவரே கவியரசர் கண்ணதாசன்.
‘பெரிய இட்த்துப்பெண்’ படம் முழுவதும் கண்ணதாசனின் பாடல் முழக்கங்களே!
உன்னையறிந்தால்…?…..!
1964 – ஆம் ஆண்டு வெளிவந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் படங்கள் ஏழு. அவற்றில் வேட்டைக்காரன் என் கடமை, பணக்காரக் குடும்பம், தாயின் மடியில் ஆகிய நான்கு படங்களுக்குக் கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.
எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக்கே இலக்கணமான இலக்கிய வரிகள்…..
“மாபெரும் சபைகளில் நீ நடந்தால் – உனக்கு
மாலைகள் விழவேண்டும்! – ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!….ஓ….ஓ….ஓ….”
அடேயப்பா!
‘மாபெரும் சபைகளுக்குள் நீ நடந்து வந்தாலே, உன் மகிமையறிந்து மாலைகள் வந்து விழவேண்டும்! ஒரு குறையும் சொல்ல முடியாத, மாற்றுக் குறையாத பொன்னான மன்னவன் இவனென்றே, இந்த உலகம் உன்னைப் போற்றிப் புகழவேண்டுமாம்!’
இவையெல்லாம் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் நடந்தவையல்லவா? நாம் கண்டவையல்லவா? இவற்றைத் தானே கவியரசர் கண்ணதாசன் அன்றே சொன்னார்! அவர் சொன்ன வாக்கு இவ்வையகத்தில் வாழ்ந்த எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் பலித்தவைதானே!
எத்தனையோ பாடல்கள்…. கவிஞரின் கருத்துகளில் இருந்து உருவாகியிருந்தாலும்; எவர் எவர்க்கோ அவர் எழுதியிருந்தாலும், எம்.ஜி.ஆருக்குப் பொருந்திய விதங்களே வியத்தகு சிறப்புக்கு உரியன எனில் மிகையாகா
ஒருவரது சிந்தனையோட்டத்தை அறியும் திறன் என்பது, மற்றவரிடத்தில் அமையும்போதுதான், இருவரது கருத்துகளும் ஒன்றாகி, நன்றாக வெளிப்படும். இத்தகு அதிசயக் கூட்டமைப்பு ‘எம்.ஜி.ஆர் – கண்ணதாசன்’ இருவரிடையேயும் நிலவியது.
அதனால்தான், கவிஞரது பார்வையில் பார்த்த எம்.ஜி.ஆர் என்ற கற்பக மரம், பூத்துக் காய்த்துக் கனிந்து பலன்கள் தந்து, நிலைத்து நின்றதை நம்மால் நாளும் உணர முடிகிறது.
M.G.R. -க்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் அளிப்பார்.
எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன் ஒரு பாடல். அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காணப் புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல்.அந்தக் காட்சிக்கு பலர் பாடல் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை.
அப்போது ஒரு கவிஞர் ஏற்கெனவே எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவர்தான். அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆரை மேடைகளில் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனாலும், அந்தக் கவிஞர் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று எம்.ஜி.ஆர். கூறிய தில்லை. எம்.ஜி.ஆர். படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன் என்று அந்த கவிஞரும் சொன்ன தில்லை. மேடைப் பேச்சுக்கள் ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம்.ஜி.ஆர் படங்களின் தயாரிப்பாளர் களும் இயக்குநர்களும் கவிஞரை அணுகத் தயங் கினர். அதனால், எம்.ஜி.ஆரின் சில படங்களில் அவர் பாடல்கள் இடம்பெறவில்லை.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் மேலே குறிப் பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் அந்தக் கவிஞரை விட்டே அந்த பாடலை எழுதச் சொன்னால் என்ன? என்ற யோசனை பிறந்தது. படக்குழுவினர் கவிஞரி டம் விஷயத்தைச் சொல்ல, அவரும் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாடல் மிக வும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையை பாராட்டி அந்தப் பாடலை ஓ.கே. செய்தார்.
அந்தப் பாடல்தான் காலத்தால் அழியாத
‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்…’
அந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ண தாசன். அவர் கடுமையாக தாக்கிப் பேசுவாரே தவிர, மனதில் ஒன்றும் கிடையாது என்பதும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.
சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.
‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’
என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.
கோடி மக்கள் இம்மண்ணில் வாழ்ந்ததுண்டு. வாழ்ந்த சுவடுகள் தெரியாமல் மறைந்ததும் உண்டு. ஆனால் மக்களின் மனங்களில் நிலைத்து நிற்பவர் யாவர்?
மாபெரும் வீரர்! மானத்தைக் காப்போர்!
இவர்கள் மக்கள் மனங்களில் மட்டும் அல்ல…. வருங்காலச் சரித்திரத்திலும் சாய்ந்துவிடாது நிலைத்து நிற்பர்.
ஆக்கம்:எஸ்.கணேசன்ஆச்சாரி சதீஷ் கம்பளை