எம்.எஸ். சுப்புலட்சுமி18ஆம் ஆண்டு நினைவுஞ்சலி
இசைப் பேரரசி,பாரத ரத்னா
எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவுஞ்சலி தினம் இன்று…..!
11.12.2004…….11.12.2022..
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்பதே இவர் பெயரின் விரிவாக்கம். எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மையார் ஒரு புகழ் பெற்ற கர்நாடக இசைப் பாடகியாவார்.
1998 ஆம்ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான “பாரத ரத்னா: விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழ், கன்னடம்,
மலையாளம், தெலுங்கு, வங்காளமொழி,
ஹிந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் அவையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார். இவர் இசையரசி,
இசைப் பேரரசி, இசைக்குயில் , இசை ராணி என்றும் அழைக்கப்படுகிறார்.1916.09.16 அன்று இசைக்கலைஞர் மதுரை
சண்முகவடிவு அம்மாள்,சுப்பிரமணியம் இணையருக்கு மகளாக பிறந்தார்.இவர் தம் சகோதரர் சக்திவேல், சகோதரி வடிவாம்பாள் ஆகியோருடன் இசை தொடர்பான சூழலில் வளர்ந்தார். இவரது தாயார் சண்முகவடிவு போன்றே வடிவாம்பாள் வீணை மீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். சக்திவேலுக்கு மிருதங்கத்தில் ஈடுபாடு அதிகம். ஆயினும் அவர்கள் இருவரும் இளவயதிலேயே காலமாகி விட்டனர். சுப்புலட்சுமியின் பாட்டியார் அக்கம்மாள் ஒரு வயலின் கலைஞர்.
சுப்புலட்சுமிக்கு அவரது தாயாரே முதலில் குருவானார். இன்னிசை வீணையுடன் சேர்ந்து பாடி வந்த இவர் இசையில் வெகுவிரைவில் புகழ் பெற்றார். சுப்புலட்சுமிக்கு எட்டு வயதாக இருக்கும் போது சென்னை ஆளுநர், சண்முகவடிவின் வீணை இசையை ஒளிப்பதிவு செய்யச் சென்றார். அப்போது மகளையும் பாடச் சொன்னார். சிறுமி சிறிதும் தயங்காமல் “மரக தவடிவம்” என்ற
செஞ்சுருட்டி இராகப் பாடலை உச்சஸ்தாயியில் பாடினார். இதைக் கேட்ட ஆளுநர் ஆச்சரியமடைந்து அப்பாடலையும் ஒளிப்பதிவு செய்து கொண்டார்.ஒரு சிறுமி தன் தாயார் மேடையில் வீணை இசைக்கச்சேரி செய்து கொண்டிருந்த போது வெளியில் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென மகளின் ஞாபகம் வரவே அவளைத் தேடி அழைத்து வருமாறு தாய் பணித்தாள். வியர்வை முத்துமுத்தாக அரும்ப சிறுமி மேடைக்கு ஓடி வந்தாள். தாய் வியர்வையைத் துடைத்து விட்டு “பாடு” என கண்டிப்பான குரலில் கூற, சிறுமி அற்புதமாகப் பாடினாள். மக்கள் கரகோஷம் செய்து “இவள் தாயை மிஞ்சி விடுவாள்” என்றார்கள். சிறுமிக்கு கரகோஷத்தைப் புரிந்து கொள்ளும் வயதல்ல ஆகையால் திரும்பவும் சென்று விளையாட வேண்டும் என்ற என்ணம் தான் இருந்தது. அந்தச் சிறுமியே பின்னாளில் எம். எஸ். சுப்புலட்சுமி ஆனார்.இசைப்பின்னணியைக் கொண்ட குடும்பமாதலால் சிறுவயதிலிருந்தே சுப்புலட்சுமிக்கு இசையில் நாட்டம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. இவரது தாயாருடன் பல கச்சேரிகளிலும் இவர்
பங்கேற்றதுண்டு. செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், முசிரி சுப்ரமணிய ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர், ராஜ மாணிக்கம் பிள்ளை, டி. என். ராஜரத்தினம் பிள்ளை, பாலக்காடு டி. எஸ். மணி ஐயர்,
ஜி. என். பாலசுப்பிரமணியம் போன்ற இசையுலக முன்னோடிகள் இடம் பெறும் இசை நிகழ்ச்சிகளை சிறுவயதிலேயே நேரில் சென்று ரசித்ததும் உண்டு. எம். எஸ். சுப்புலட்சுமி சிறு வயதில் தன் தாயாருடன் கச்சேரிகளுக்குச் சென்ற போது பெரிய கலைஞர்களே சுப்புலட்சுமியின் குரல் வளத்தை வாழ்த்தியதும் உண்டு. இவரது முறையான கல்வி ஐந்தாம் வகுப்பு வரையே அமைந்தது. இந்துஸ்தானி இசையை இவர் பண்டித நாராயணராவ் வியாசியிடமிருந்து கற்றார். அப்துல் கரீம்கான் மற்றும் பாதே குலாம்கானின்
இசையையும் இவர் இரவு நேரங்களில் ரசிப்பதுண்டு.1926ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு எல். பி இசைத்தட்டில் “மரகத வடிவும் செங்கதிர் வேலும்” எனும் பாடலை சண்முகவடிவின் வீணையும், எம். எஸ். சுப்புலட்சுமியின் பாடலும் இணைந்து வெளிவந்தது. எம். எஸ். சுப்புலட்சுமியின் முதலாவது இசைத்தட்டு இதுவாகும். மிருதங்க ஜாம்பவான் எனப் புகழப்பட்ட புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை தொடக்க காலத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் வளர்ச்சிக்கு மிக்க உதவியாக இருந்தார். அவரது மணிவிழாவில் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி நடைபெற்றது. 1935 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தக் கச்சேரி, எம். எஸ். சுப்புலட்சுமியின் இசைத் திறனை வெளியுலகம் அறியச் செய்தது. அதே ஆண்டு மைசூர் சமஸ்தானத்தில் அப்போதைய மைசூர் மகாராஜாவின் அரசவையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கத்துடன் எம். எஸ். சுப்புலட்சுமி கச்சேரி செய்தார். அது முதற்கொண்டு தென்னிந்தியாவின் எல்லா ஊர்களிலும் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரிகள் நடைபெற்றன.எம். எஸ். சுப்புலட்சுமியின் குரலைக் கேட்ட சிந்தாமணி திரையரங்கம் மற்றும் இராயல் டாக்கீஸ்
நிறுவனருமான நாட்டாமை மல்லி. என். எம். ஆர். வெங்கடகிருஷ்ணன் மற்றும் இயக்குனர் கே. சுப்பிரமணியம், எம். எஸ். சுப்புலட்சுமியை சேவாசதனம் படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிண்டியில் உள்ள ஒரு படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்றது. அப்போது சுப்புலட்சுமிக்கு துணையாக வந்தவர் சதாசிவம். 1936- 1937 களில் வெளிவந்த படத்தில் “ஆதரவற்றவர்க்கெல்லாம்” என்ற ஜோன்புரி இராகப்பாடலும், “இஹபரமெனுமிரு” என்ற சிம்மேந்திரமத்திமம் இராகப் பாடலும் பெரிதும் வரவேற்பைப் பெற்றன.
காளிதாசனார் காவியமான சகுந்தலை படத்தில் சுப்புலட்சுமி கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார். “மிகக் குதூகலிப்பதும் ஏனோ”, “எங்கும் நிறை நாதப்பிரம்மம்”, “பிரேமையில் யாவும் மறந்தேனே” ஆகிய பாடல்கள் மிகவும் புகழ் பெற்றன. இப்படத்தில் துஷ்யந்தனாக ஜி. என். பாலசுப்பிரமணியம் நடித்தார். எம். எஸ். சுப்புலட்சுமி இப்படத்தில் கோகிலகான இசைவாணி என விளம்பரம் செய்யப்பட்டார். சகுந்தலை திரைப்படத்தைத் தயாரித்தவர் கல்கி சதாசிவம் ஆவார். இவர் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசையில் ஈடுபாடு கொண்டதனால் 1940ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.1941ம் ஆண்டு சாவித்திரி என்ற படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியை நாரதர் வேடத்தில் நடிக்க வேண்டினார்கள். ஆனால் ஆண்வேடத்தில் நடிக்க சுப்புலட்சுமி மறுத்து விட்டார். அப்போது எழுத்தாளர் கல்கியும் ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து வெளியேறி இருந்தார். கல்கியும் சதாசிவமும் சேர்ந்து சொந்தப்பத்திரிகை ஆரம்பிக்க விருப்பம் கொண்டனர். ஆனால் கைவசம் பணம் இருக்கவில்லை. ஆதலால் சுப்புலட்சுமி நாரதர் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு அதற்கான சம்பளத்தை வாங்கிக் கொடுத்தால் அந்தப் பணத்தைக் கொண்டு புதுப்பத்திரிகை ஆரம்பிக்கலாம் என சதாசிவம் எம். எஸ். சுப்புலட்சுமியிடம் சொன்னார். அதற்காகவே சுப்புலட்சுமி சாவித்திரி படத்தில் நாரதர் வேடத்தில் நடித்தார். அதில் கொடுக்கப்பட்ட ஊதியத்தொகையில் கல்கி வார இதழ் தொடங்கப்பட்டது. சாவித்திரி படத்தில் “மனமே கணமும் மறவாதே ஜெகதீசன் மலர்ப் பதமே”, “மங்களமும்பெறுவாய்” போன்ற சில பாடல்கள் புகழ் பெற்றவை.பக்த மீரா எனும் திரைப்படம் 1945 இல் வெளியிடப்பட்டது. “காற்றினிலே வரும் கீதம்”, “பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த”, “கிரிதர கோபாலா”, “எனது உள்ளமே” போன்ற பாடல்கள் பிரபலமானவை. பக்த மீரா இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு, வட நாட்டவருக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அரசியல் பிரமுகர்கள் இந்தியாவின் ஆளுநர் மவுண்ட்பேட்டன் பிரபு தம்பதியினர், பிரதமர் ஜவஹர்லால் நேரு, கவியரசு சரோஜினி நாயுடு ஆகியோரின் நட்பும் அறிமுகமும் சதாசிவம் தம்பதியினருக்கு ஏற்பட்டது. ஹிந்தி மீராவைப் பார்த்த பிரதமர் நேரு “இசையின் இராணிக்கு முன்னால் நான் வெறும் பிரதமர் தானே என்றார்.இவர் நடித்த படங்கள்:
1938-சேவாசதனம்.
1940-சகுந்தலை
1941-சாவித்திரி
1945-மீரா. போன்றவைகள்.
ஹிந்தியில் வெளியான மீரா பஜன்கள் ஹிந்தி ரசிகர்களிடையே சுப்புலட்சுமிக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்தது. அதே போல கேதாரி நாத்திலிருந்து
கன்னியாகுமரி வரையான பக்தர்களையும் இவரது ஆன்மீகக் குரல் பரவசப்படுத்தியது. 1944 இல் நான்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தி இரண்டு கோடி ரூபா வரை நிதி திரட்டினார். மனைவியின் குரலை பொதுநலத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்பது சதாசிவத்தின் எண்ணமாகவிருந்தது.
பின்னர் இந்திதி மருத்துவம்,அறிவியல், ஆராய்ச்சி, கல்வி, சமயத்தொண்டுகள், சமூகத்தொண்டுகள் போன்றவற்றிற்கு அளிக்கப்பட்டது.”இந்தியா இந்தத் தலைமுறையில் ஓர் மாபெரும் இசை கலைஞரை உருவாக்கியுள்ளது என நீங்கள் பெருமிதம் கொள்ள வேண்டும்” என இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் கவிக்குயில் சரோஜினி நாயுடு இவருக்கு புகழாரம் சூட்டினார்.இவருக்கு கிடைத்த விருதுகள்:பத்மபூஷண்,சங்கீத நாடக அக்காடமி விருது,சங்கீத கலாநிதி விருது,
இசைப்பேரரசி விருது,மகசேசே விருது,பத்மபூஷண் விருது,சங்கீத கலா சிகாமணி விருது,காளிதாசன் சம்மன் விருது,இந்திரா காந்தி விருது,இந்தியாவின் உயர் “பாரத ரத்னா “விருது என பலவாகும்.
இந்திய தேச கலைக் கலாசாரத்தின் அடையாளமாக சர்வதேசத்தில் உயர்ந்தவர் எம்.எஸ்.சுப்புலட்மி அம்மையார். சங்கீத உலகில் இவர் போல் புகழ் பெற்றவர்கள் இவ்வகிலத்தில் யாருமில்லை எனக்கூறினால் அது மிகையாகாது.2004.12.11 அன்று 88 வது அகவையில் கானக்குரலரசி இசைக்குயிலை விண்ணுலகம் வரவேற்றுக் கொண்டது.
இவர் பாடிய “காற்றினிலே வரும் கீதம்” போல் காலத்துடன் தொடர்ந்து இசை வடிவில் என்றும் நம்மிடையே காற்றோடு காற்றாய் கலந்திருப்பார் “இசைப்பேரரசி”
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை.