மலையகத்தின் விடிவெள்ளி..
மலையகத்தின் விடிவெள்ளியும்,அரசியல் தியாகியுமான
வி. கே. வெள்ளையன் அவர்களின் 51வது நினைவஞ்சலி தினம் இன்றாகும்….!
வி. கே. வெள்ளையன்…வெள்ளையன் காளிமுத்து வெள்ளையன் தோற்றம்:நவம்பர் 28, 1918 .மறைவு:டிசம்பர் 2, 1971.
இவர் இலங்கையின் மலையகத்
தொழிற்சங்கவாதியும், அரசியல்வாதியும் ஆவார். பெருந்தோட்டக் கூலிகளாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தியர்
களைத் தொழிலாளர்கள் என்ற வரையறைக்குள் கொண்டு வந்தவர் எனப் போற்றப்படுகிறார். உலக தொழிற்சங்க அமையத்தின் பிரதான செயற்பாட்டாளராக பன்னாடுகளால் மதிக்கப்பட்டவர். இவர் தனக்கென ஒரு குடும்பம், வீடு, மனைவி, மக்கள் எதனையும் வைத்துக் கொள்ளாது தொழிலாளர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து துறவி வாழ்க்கை வாழ்ந்ததால், மலையக தொழிற் சங்க வரலாற்றில் “தொழிற்சங்கத் துறவி” என இவர் போற்றப்படுகின்றார்.இலங்கையின் மலையகத்தில் பொகவந்தலாவையில்
முத்துலக்ஷ்மி தோட்டத்தில் கங்காணியாகப் பணியாற்றிய வெள்ளையன் காளிமுத்து, மற்றும் பேச்சியம்மாள் ஆகியோருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தார் வெள்ளையன். தன்னுடைய ஆரம்பக் கல்வியை பொகவந்தலாவை கெம்பியன் தோட்டப் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை பொகவந்தலாவை சென். மேரிஸ் மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை
கண்டி திரித்துவக் கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார். 1939ஆம் ஆண்டு கண்டி திரித்துவக் கல்லூரியின் ரக்பி அணியின் தலைவராக செயல்பட்டார். இவர் ஒரு குத்துச் சண்டை வீரராகவும் இருந்தார்.கல்லூரியை விட்டு வெளியேறியதும் அவரது ஆங்கிலப் புலமை மற்றும் அவரது மிடுக்கான தோற்றம் என்பவற்றைக் கண்டு எப்படியாவது அவரைத் தோட்டத் துரையாக ஆக்கிவிடுவது என அவரது குடும்பத்தார் முயன்றனர். ஆனால் வெள்ளையனுக்கு அவரது சமூகத்தின் மேல் இருந்த அக்கறை அவரை ஒரு சமூக சேவையாளனாக்கியது. தோட்டத் தொழிலாளர்களின் அடக்கு முறைக்கெதிராகப் போராட காவல்துறைப் பணி சிறந்ததென காவல்துறை மேலதிகாரி தேர்வில் தோற்றி மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டார். ஆனாலும் அவர் இலங்கைக் குடியுரிமை பெற்றிருக்காததால் அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.இதனை அடுத்து பொகவந்தலாவை கூட்டுறவுச் சங்கக் கடையின் முகாமையாளராகப் பணியாற்றினார். கூட்டுறவுச் சங்கங்கள் என்ற பெயரில் தோட்டத் தொழிலாளர்கள் கொள்ளையடிக்கப்படுவதனை எதிர்த்த அவர் கூட்டுறவுக் கடைகளில் நடக்கும் அநியாயங்களை வெளிப்படுத்தி துண்டுப்பிரசுரம் அச்சடித்து விநியோகித்ததோடு அதனை விட்டும் வெளியேறினார்.1942 ஆம் ஆண்டு இலங்கை-இந்தியர் காங்கிரஸ் தலைவர்களான
கே. இராஜலிங்கம், எஸ். சோமசுந்தரம் ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. இவர்கள் பொகவந்தலாவை பகுதிகளுக்கு வருகை தரும் போது முத்துலக்ஷ்மி தோட்டத்தில் அமைந்துள்ள வெள்ளையனின் வீட்டிலேயே தங்கிச் செல்வர். இவர்களது ஆலோசனையின்
பேரில் தொழிற்சங்கத்துறையைத் தெரிவு செய்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரசின்
பொதுச் செயலாளராக மிகக்குறுகிய காலத்தில் தெரிவு செய்யப்பட்டார்.தனக்கென ஒரு தனி வழியில் செயற்படும் நோக்கில் காங்கிரசிலிருந்து வெளியேறி 1965ஆம் மே நாள் அன்று தொழிலாளர் தேசிய சங்கத்தை நிறுவினார்.சிந்தாமணி பத்திரிகை வெளியீடான “தந்தி” இதழில் மலையகப் பிரச்சினைகள் யாவை? எனும் தொடர் பத்தி ஒன்றினை ஓராண்டுக்கும் மேற்பட்ட காலமாக எழுதி வந்தார். இதன் சில பகுதிகள் ”மலையகப் பிரச்சினைகள் யாவை?” எனும் தலைப்பில் நூலுருவாக வெளிவந்தது. ஆங்கிலப் பத்திரிகைகளிலும் மலையகத்தவர்களின் பிரச்சினைகளை வெளிக் கொணர்ந்தார். முதன் முதலாக தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் தேவை என்ற கோரிக்கையை முன்னெடுத்தார்.
ஒரு வருடத்தில் ஒரு தொழிலாளி வேலை செய்த 14 நாள் சம்பளத்தை சேவைக் காலப் பணமாக (இது “14 நாள் காசு” எனப்படுகிறது) பெற்றுக் கொடுகக் வேண்டும் என தொழில் நியாய சபையில் வலியுறுத்தி வெற்றியும் கண்டார்.
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை.