மின்சாரம் 3 பேர் உயிரிழப்பு

மழை பெய்த போது மொட்டை மாடியில் தேசிய கொடியை ஏற்றிய 3 பேர் மின்சாரம் பாய்ந்து பலி:ராஞ்சி: ஜார்கண்ட்டில் மழை பெய்த போது மொட்டை மாடியில் தேசிய கொடியை ஏற்றிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் காங்கே பகுதியை சேர்ந்த குடும்பத்தினர், சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது வீட்டின் மொட்டை மாடியில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர். அப்போது விஜய் ஜா என்பவரின் அரிசி ஆலையின் மொட்டை மாடிக்கு அருகில் உயர் அழுத்த மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கம்பத்தின் அருகே, விஜய் ஜாவின் குடும்பத்தினர் தேசிய கொடியை கட்ட முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து, ஆர்த்தி ஜா (26), புஜா ஜா (25), வினீத் ஜா (23) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.தகவலறிந்த காங்கே போலீசார், சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து மூன்று பேரின் சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து காங்கே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரிஜ் கிஷோர் கூறுகையில், ‘மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த வினீத் ஜா மற்றும் பூஜா ஜா ஆகிய இருவரும் விஜய் ஜாவின் குழந்தைகள் ஆவர். உயிரிழந்தவர்களில் மற்றொருவரான ஆர்த்தி ஜா, விஜய் ஜாவின் தம்பி சிவகுமார் ஜாவின் மகள் ஆவார். உயிரிழந்த மூன்று பேரும் தங்களது வீட்டின் மொட்டை மாடிக்கு நேற்றிரவு சென்று தேசிய கொடியை ஏற்ற முயன்றனர். அப்போது லேசான மழை தூரல் மற்றும் அதிக காற்று வீசியுள்ளது. எதிர்பாராதவிதமாக மொட்டை மாடியின் வழியாக செல்லும் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து மூன்று பேரும் பலியாகினர். இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன் என மூன்று பேரும் மின்சாரம் தாக்கி இறந்ததால், வீட்டினர் பெரும் சோகத்தில் உள்ளனர்’ என்றார். செய்தி வேல்முருகன்

Leave a Reply

Your email address will not be published.