தமிழக அரசு சார்பில் சுதந்திர தின விழா…
75வது சுதந்திர தின விழா இன்று கோலாகல கொண்டாட்டம்: டெல்லியில் பிரதமர், சென்னையில் முதல்வர் ஏற்றுகின்றனர்.! தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு:சென்னை: நாடு முழுவதும் 75வது சுதந்திர தினவிழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றுகின்றனர். நாட்டின் 75வது சுதந்திர தினவிழா இன்று (15ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் அனைத்து வீடுகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகளில் நேற்று முதல் (13ம் தேதி) தேசிய கொடியை மக்கள் ஏற்ற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தார். அவரது அறிவிப்பில், சுதந்திர தின அமுத பெருவிழா மக்கள் பேரியக்கமாக வடிவெடுத்து இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே, ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடியேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.அதன்படி நாடு முழுவதும் பெரும்பாலான வீடுகளில் நேற்று காலை முதல் தேசியக்கொடியை பொதுமக்கள் ஏற்றி சுதந்திர தின கொண்டாட்டத்தை துவக்கி வைத்துள்ளனர். டெல்லி செங்கோட்டையில் நாளை காலை நடைபெறும் சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றும் வரையில், அதன் 5 கிலோ மீட்டர் பரப்பளவில் பட்டம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் பிற அமைப்புகளின் ட்ரோன் தடுப்பு அமைப்புகள் நிறுவப்படுகின்றன. இந்த விழாவில் 7 ஆயிரம் பேர் மட்டும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். செங்கோட்டையை சுற்றிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பட்டம் பறக்க விடும் நபர்களைப் பிடிக்க, பதற்றமான இடங்களில் 400 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு குறித்து டெல்லி சட்டம் – ஒழுங்கு சிறப்பு போலீஸ் கமிஷனர் தீபேந்திர பதக் கூறுகையில், ‘டெல்லியில் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை போடப்பட்டுள்ளது. 13ம் தேதி முதல் (15ம் தேதி) வரை பட்டங்களையோ, பலூன்களையோ, சைனீஸ் லாந்தர்களையோ பறக்க விட்டால் தண்டிக்கப்படுவார்கள். வான்வழி தளங்கள், ஆளில்லா மற்றும் ஆள் உள்ள பறக்கும் பொருட்களில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் டெல்லி செங்கோட்டையில் ரேடார்கள் பயன்படுத்தப்படும். செங்கோட்டையை சுற்றிலும் உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அவற்றில் பதிவாகிற காட்சிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
மதிய உணவு டப்பாக்கள், தண்ணீர் பாட்டில்கள், ரிமோட்-கண்ட்ரோல் கார் சாவிகள், சிகரெட் லைட்டர்கள், கைப்பெட்டிகள், கைப்பைகள், கேமராக்கள், பைனாகுலர்கள், குடைகள் உள்ளிட்டவை டெல்லி செங்கோட்டை வளாகத்தில் அனுமதிக்கப்படாது’ என்றார். முன்னதாக டெல்லி காவல்துறை சார்பில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில், ஓய்வு விடுதிகள், பார்வையாளர்கள் மாடங்கள், பார்க்கிங் ஏரியா ஆகியவற்றை போலீசார் கண்காணிப்பு வலையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நாளை காலை 9 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். நிகழ்ச்சியின்போது போலீஸ் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்று கொள்கிறார். இதைதொடர்ந்து கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு `தகைசால் தமிழர்’ என்ற விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை முதல்வர் வழங்குகிறார்.இதேபோல் அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருது, முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள், கோவிட்19 தடுப்பு பணிக்கான சிறப்பு பதக்கம் உள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். முன்னதாக காலை 8.45 மணிக்கு சுதந்திர தின நாள் நிகழ்ச்சிக்கு கோட்டை கொத்தளத்துக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் இறையன்பு வரவேற்கிறார்.
முதல்வருக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை தலைமை செயலாளர் அறிமுகம் செய்து வைக்கிறார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு கோட்டை கொத்தளத்தில் 9 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றுகிறார். சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள் என பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழ் மலர் செய்தியாளர் வேல்முருகன்.