விசைத்தறிகள் உரிமையாளர்கள் கோரிக்கை

கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2.5 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த விசைத்தறி தொழிலுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம், தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்த மின் கட்டண உயர்வால், விசைத்தறிக் கூடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி கூறுகையில், ‘கடந்த ஆறு மாதங்களாக விசைத்தறிக்கூடங்கள் முறையாக இயங்கவில்லை. அதிலும் கடந்த இரண்டு மாதங்களில் 90% தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தச்சூழலில் எப்போதும் இல்லாத அளவிற்கு சிறு, குறு தொழிலுக்கு மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 750 யூனிட் வரை இலவச மின்சாரம் அறிவித்துள்ள நிலையில், 751 முதல் 1,000 யூனிட் வரை 70 பைசாவும், 1,000 முதல் 1,500 யூனிட் வரை 1.05 பைசாவும், 1,500 முதல் ஒரு யூனிட்டுக்கு 1.40 பைசாவும் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
’விசைத்தறித்தொழிலை அழிவிலிருந்து காப்பாற்ற மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்’
இது விசைத்தறியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறு தொழில்களுக்கு மின் சலுகை உள்ளிட்டப் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதால்தான் தொழில் பாதுகாக்கப்பட்டது. தற்போது அறிவித்துள்ள மின் கட்டண உயர்வு காரணமாக குடும்பத்தில் உள்ள அனைவரும் வேலை செய்தாலும் மின் கட்டணம் மட்டுமே செலுத்த முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சிறு தொழில்களைக்காப்பாற்ற மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: கடந்த எட்டு ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லாத சூழலில், தற்போது 15 விழுக்காடு கூலி உயர்வு வழங்கியுள்ளனர். அதுவும் இன்னும் அமல்படுத்தாத நிலையில், 31% மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதன்காரணமாக விசைத்தறிக்கூடங்கள் செயல்பட முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்கள் இல்லாமல் போனால் நாடு முன்னேற்றம் அடையாது.
வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும். முன்னொரு காலத்தில் சிறு தொழில்களுக்குப் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதால் தொழில் முன்னேற்றம் அடைந்த நிலையில், தற்போது மின் கட்டண உயர்வு உள்ளிட்டப்பல்வேறு பிரச்னைகள் காரணமாக தொழில்கள் அழியும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமியின் பேட்டி
இதன்காரணமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு பட்டினி சாவுகள் ஏற்படும் சூழல் உள்ளதால், தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். சிறு, குறு தொழில்களைக் காப்பாற்றுவது தனது கடமை என தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கடி கூறிவரும் நிலையில், சிறு தொழில்களைக்காப்பாற்ற மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்.
விசைத்தறி தொழில் இல்லாமல் போனால் அதனை நம்பியுள்ள நூற்பாலைகள் இயங்காத நிலை ஏற்படும். இதன் காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். அனைத்து தொழிலும் முடங்கிவிடும் சூழல் உள்ளதால், தமிழ்நாடு முதலமைச்சர் எங்களுடைய கோரிக்கையை ஏற்று சிறு, குறு தொழில்களுக்கு அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது –

அமைச்சர் செந்தில் பாலாஜி

திருப்பூர் தமிழ் மலர் மின்னிதழ் செய்திகளுக்காக..
T.கார்த்திக் குமார்

Leave a Reply

Your email address will not be published.